அன்றோஆ மோஎனவுஞ் சமய கோடி | அத்தனையும் வெவ்வேறாய் அரற்ற நேரே | நின்றாயே நினைப்பெறுமா றெவ்வா றாங்கே | நின்னருள்கொண் டறிவதல்லால் நெறிவே றுண்டோ? |
(பொ - ள்.) மெய்ப்பொருள் இஃதல்லவோ? இஃதாமோ? என்பதாகச் சமயகோடிகள் அனைவரும் வேறு வேறாகக் கூறிப் (ஒருவரோடொருவர் சொற்போரிடும் வண்ணம்) பிதற்றும்படியாக அவரவர் கொள்கைக்கு ஏற்றவாறு நின்றருளினையே? நின் திருவடியினை உண்மையாகப் பெறுமாறு எவ்வண்ணம்? அவ்விடத்து (நூலுணர்வாலுணர வொண்ணாத நின் திருவடியினை நுண்ணுணர்வருளும்) நின் திருவருளைத் துணையாகக் கொண்டுணர்வதாகும்; அதுவல்லாது வேறு வழியில்லை.
(வி - ம்.) சமயங்கள் நூலுணர்வால் அறியப்படுவன. அந் நூல்கள் இறைவன் உண்ணின்றுணர்த்த மெய்யடியார்கள் வாயிலாக வெளிப்போந்துலவும் இறைவன் நூல்களெனவும், இந்நூல்களின் வழித்தாய் இவற்றைக் கற்றுணர்ந்த கல்வியறிவு கொண்டும் தம் நுழை புலத்தாலும் அருள் பெற விழைந்து நின்ற அறிவர் நூலென்றும் இரு திறப்படும். சமயகோடிகள் மேற்கொள்ளும் நூல்கள் அனைத்தும் அறிவர்நூ லெனப்படும். அம்மையொடு நால்வர் அருள்மூலர் மெய்கண்டார், தம்மையுணர்ந்தார் நூல் இறைவன் நூல்களாகும். இறைவன் நூலுணர்ந்தார் சமயங் கடந்த சால்பினர். பொது1 நோக்குடைய பண்ணியர். அஃது அவர்கள் கைக்கொண்டொழுகும் புறக்கணிப் பின்மையாலுணரலாம். இவ்வுண்மை "தென்னாடுடைய சிவனே போற்றி, எந் நாட்டவர்க்கும் இறைவா போற்றி" யெனச் சிறப்பும் பொதுவுமாகத் தெளிவுபடுத்தியருளினமையால் விளங்கும். இதுவே சித்தாந்த சைவத்தின் சீரிய வுண்மையாகும். அம்மை - காரைக்காலம்மை.
(2)
நெறிபார்க்கின் நின்னையன்றி அகிலம் வேறோ | நிலநீர்தீக் கால்வானும் நீய லாத | குறியாதும் இல்லையென்றால் யாங்கள் வேறோ | கோதையொரு கூறுடையாய் கூறாய் கூறாய். |
(பொ - ள்.) முறையாக உய்த்துணரின் (வினைமுதற்காரணமாகவும் நிலைக்களக் காரணமாகவும் யாண்டும் விட்டு நீங்காது திகழ்கின்ற) அடிகளாகிய தேவரீரை யல்லாது இவ்வுலகம் தனித்த வேறாமோ? இது போல் நிலம், நீர், தீ, காற்று, வானம் எனப்படும் ஐம்பெரும் பூதங்களும் நின்னையன்றி அவற்றின் தோற்றமும் பெயரும் தோன்றுவதற்கேயில்லை என்பது தானே பெறப்படும். (அப்படியானால் உடலுடன் இருவினைக்கீடாகப் பொருத்தப்பட்ட) யாங்கள் மட்டும் எங்ஙனம் வேறாதல் கூடும்? உலகனைத்தினையும் பெறாது பெற்றெடுத்த) உமையம்மை யாரை ஒரு கூற்றிலே உடைய உம்பர் பெருமானே திருவாய் மலர்ந்தருள்வாயாக; திருவாய் மலர்ந்தருள்வாயாக.
(3)
1. | ஓதுசமயங்கள். சிவஞானசித்தியார், 8. 2 - 3. |