(வி - ம்.) தாய்போல் தலையளிக்கும் வாழ்க்கைத் துணைவியர் அல்லாத மாதர் என்னும் குறிப்புத் தோன்ற 'துன்மார்க்க நாரிமார்' என்றமை காண்க.
(9)
நீதியெங்கே மறையெங்கே மண்விண் எங்கே | நித்தியராம் அவர்களெங்கே நெறிதப் பாத | சாதியெங்கே ஒழுக்கமெங்கே யாங்க ளெங்கே | தற்பரநீ பின்னுமொன்றைச் சமைப்ப தானால். |
(பொ - ள்.) தனிமுதற் பொருளே, நீ வேறொரு வகையான உலகினைப் படைத்தருள்வையாயின், இப்பொழுது வழங்கி வரும் அறமுறையெனப்படும் நியாயம் எங்கே? அம் முறைக்குத் துணை நிற்கும் இறைவன் நூலாம் மறைகளெங்கே? மண்ணுலக விண்ணுலக இயல்புகளெங்கே? ஒழுக்க நெறி தவறாத குலங்கள் எங்கே? கைக்கொள்ளும் நல்லொழுக்கம் எனப்படும் ஆசாரங்கள் எங்கே? எளியேங்களின் நிலைமைகள்தாம் எங்கே?
(10)
ஆனாலும் யான்எனதிங் கற்ற எல்லை | அதுபோதும் அதுகதிதான் அல்ல வென்று | போனாலும் யான்போவன் அல்லால் மோனப் | புண்ணியனே வேறுமொரு பொருளை நாடேன். |
(பொ - ள்.) ஆயினும் இவ்விடத்து யான் என்னும் அகச் செருக்கும், எனதென்னும் புறச்செருக்கும் ஒழிந்த இடம் (திருவடிப்பேற்றுச்) சிறந்த இடம். அந்நிலை அடியேனுக்குக் கிடைக்கப்பெறின் அதுவே (பேரின்ப நிலைக்குப்) போதுமானதாகும்; அந்நிலை பேரின்ப நிலை அல்லவென்று போனாலும் ("மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று" என்னும் பொதுமறைப்படி) அடியேன் அந் நிலையினைவிட்டுச் சிறிதும் மாறுதல் செய்யேன்: மோன நிலையுணர்த்தும் புண்ணியனே! அம் மோன நிலைக்கு வேறாக மற்றொரு பொருளையும் அடியேன் நாடுவேன் அல்லேன். அற்ற-ஒழிந்த. கதி-நிலை.
(11)
பொருளேநின் பூரணமே லிட்ட காலம் | போக்குவர வுண்டோதற் போத முண்டோ | இருள்தானுண் டோஅல்லால் வெளிதான் உண்டோ | இன்பமுண்டோ துன்பமுண்டோ யாமங் குண்டோ. |
(பொ - ள்.) "யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடைய" நிறைவுடைய மெய்ப்பொருளே, நின்னுடைய நீக்கமில்லாத முழுநிறைவு மேலிட்டபொழுது (பகல்விளக்குப்போல்) யான் அதனுள் அடங்கிவிடுவதன்றி, உயிரினறிவு முனைத்துத் தோன்றமாட்டாது. அதனால் தற்போதம் உண்டாகாது; தற்போதத்திற்குக் காரணமாகிய ஆணவவல்லிருளும் ஆற்றலடங்கிவிடும்; மாயாகாரிய விளக்கங்களும் மறைந்து விடும்; அதனால் ஏற்படும் நிலையில்லாத இன்பத்துன்பமும் உள்ளத்தில் தாக்கமாட்டா; நாம் என்னும் முனைப்பும் உண்டாகமாட்டா.
(12)