உலகத்தார் மயக்கத்தால் கூறும் கற்பனையாகும்; அம் மயக்கமாகிய பயனில்லாத வலையினைக் கிழித்து அப்புறப்படுத்தி எளியேன் அடிமை என எண்ணாது தலைவன் என எண்ணிச் செய்யும் பிறப்புக்கு வித்தாம்1 செயல் நீங்கிச் சிறப்புக்கு வித்தாம் அடிமையாக வாழ மேலாம் மெய்ப்பொருளே, நின்னுடைய பேரின்பப் பெருநோக்கத்தினை அருள்புரிவாயாக.
(6)
எங்கேயெங் கேஅருளென் றெமையி ரந்தான் | ஏழையிவன் எனவுமெண்ணி யிச்சை கூரும் | அங்கேயங் கேயெளிவந் தென்னை ஆண்ட | ஆரமுதே உனைக்காண்பான் அலந்து போனேன். |
(பொ - ள்.) மிக்க ஏழைமதியினையுடையனாகிய இவன் திருவருள் எவ்விடத்தது, எவ்விடத்தது2 என்று அன்பால் நினைந்து மன்றாடி வேட்கை மிகும் அவ்வவ்விடத்து எளிமையாகத் தோன்றியருளி எளியேனை ஆட்கொண்டருளிய நிறைந்த பேரமிழ்தே உன்னை மீண்டுங் காணும்பொருட்டு அலமந்து வாடினேன்.
(7)
போனநாட் கிரங்குவதே தொழிலா இங்ஙன் | பொருந்துநாள் அத்தனையும் போக்கி னேன்என் | ஞானநா யகனேநின் மோன ஞான | நாட்டமுற்று வாழ்ந்திருக்கும் நாளெந் நாளோ. |
(பொ - ள்.) கழிந்து போன நாள்களை எண்ணிக் கழிவிரக்கங் கொள்வதே நீங்காத் தொழிலாகி இவ்வாறு வந்து பொருந்து நாளத்தனையும் துன்புற்றுப்போக்கினேன்; மூதறிவுமுதல்வனே, நின்னுடைய மோன மெய்யுணர்வு நோக்கத்தையடைந்து இன்பமாய் வாழ்ந்திருக்கு. நாள் எந்நாளோ?
(8)
நாள்பட்ட கமலமென்ன இதயம் மேவும் | நறுந்தேனே துன்மார்க்க நாரி மார்கண் | வாள்பட்ட காயமிந்தக் காய மென்றோ | வன்கூற்றும் உயிர்பிடிக்க வருமந் நீதி. |
(பொ - ள்.) காலை மலர்ந்த செந்தாமரை யென்று சொல்லும்படி எளியேன் உள்ளமாகிய செந்தாமரையின்கண் மேலெழுந்து வீற்றிருந்தருளும், நறிய தேனே, (தெய்வ நாட்டமும் பிறப்புக்கஞ்சும் பெற்றியும் வாய்க்கப்பெறாத) தீய நெறியிற் செல்லும் பெண்களுடைய கண்களாகிய வாட் படைபட்ட புண்ணுள்ள உடம்பு இவ்வுடம்பு என (குற்றமுடையாரைக் கைப்பற்றக் கடுகவரும் பாடிகாவலரையொத்த) கொடிய கூற்றுவன் உயிர்பிடிக்கவரும் அம் முறைநாள் என்றோ? நீதி - முறை.
1. | 'மேலைக்கு வித்து.' சிவஞானசித்தியார். 2. 2. 9. |
2. | 'எங்கேனு.' 7. 2. 3. 2. |