பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


558


பொறிவழியே ஏழை பொறியாய் உழல்வதுநின்
அறிவின் விதித்தவிதி ஆமோ பராபரமே.
     (பொ - ள்) ஐம்பொறிகளின் வழியாக அறிவற்ற எளியேன் புலன்களிற்பட்டு அலைந்து திரிந்து துன்புறுவது தேவரீருடைய அந்தண்மைக்குப் பொருந்துமோ? (பொருந்தா தென்க) துன்புறும் படி செய்வதுநின் திருவாணை போலும்.

(175)
பாசசா லங்கள்எலாம் பற்றுவிட ஞானவைவாள்
வீசுநாள் எந்நாள் விளம்பாய் பராபரமே.
     (பொ - ள்) மாயா காரியப் பொருள்கள் பாசக்கூட்டம் எனப்படும். அவற்றின்கண்ணுள்ள பற்றுவிட்டு நீங்கும்படி திருவடியுணர்வாம் ஞானவாள் கொண்டு வீசுநாள் எந்நாளோ? திருவாய் மலர்ந்தருள்வாயாக.

(176)
எந்தவுட லேனும் எடுத்தவுடல் நல்லதென்று
சிந்தைசெய வந்ததிறஞ் செப்பாய் பராபரமே.
     (பொ - ள்) உலகத்தின்கண் காணப்படும் எல்லாப் பிறப்பினும் மக்கட் பிறப்புச் சிறந்ததாகக் கருதப்படுவதற்குக் காரணம் யாதெனத் திருவாய் மலர்ந்தருள்வாயாக.

(177)
பொய்யெல்லாம் ஒன்றாய்ப் பொருத்திவைத்த பொய்யுடலை
மெய்யென்றான் மெய்யாய் விடுமோ பராபரமே.
     (பொ - ள்) நிலையற்றனவாகிய மெய்யெனப்படும் தத்துவக்கூட்டங் களை ஒன்று சேர்த்துப் பொருத்தப்பட்ட இப் பொய்யுடலை மெய்யென்று பெயரிட்டு அழைப்பதால் மெய்யாகி விடுமோ? (ஆகாதென்க,)

(178)
மின்னனைய பொய்யுடலை மெய்யென்று நம்பிஐயோ
நின்னை மறக்கை நெறியோ பராபரமே.
     (பொ - ள்) மின்னலையொத்து நிலைநில்லாத இப் பொய்யுடலை நிலையான மெய்ப்பொருளென்று தவறாக நம்பி, ஐயோ மெய்ப்பொருளாகிய நின்திருவடியை மறந்துவிடுதல் நன்னெறியாகுமோ? (ஆகாதென்க.)

(179)
நித்தியமொன் றில்லாத நீர்க்குமிழி போன்றவுடற்
கித்தனைதான் துன்பமுண்டோ என்னே பராபரமே.
     (பொ - ள்) என்றும் நிலைத்திருப்பதற் கில்லாத நீர்க்குமிழியை யொத்த இவ் வுடற்கு இவ்வளவு துன்பங்கள் உண்டாதல் முறையாகுமோ? கூறியருள்வாயாக.

(180)
தேகம்இறும் என்றுசடர் தேம்புவதென் நித்திரையில்
ஊகமறிந் தாற்பயந்தான் உண்டோ பராபரமே.