(பொ - ள்) இவ்வுடம்பு நம்மைவிட்டு நீங்கி இறக்குமென்று நாம் அச்சங்கொள்ளுவதற்கோ, வருந்துவதற்கோ என்ன காரணமுள்ளது? நாடொறும் நமக்கு ஏற்படும் பேருறக்கத்தின்கண் நாம் இப் பருவுடம்பினின்றும் நீங்கியிருக்கின்றோ மென்பதையுணர்ந்தால் காரணத்தால் இறக்குங் காலத்து அச்சமுண்டாகுமோ? (உண்டாகாதென்க.)
(181)
ஏதைச் சுமையா எடுப்பார் எடுத்தவுடல் | சேதமுறின் யாதுபின்னே செல்லும் பராபரமே. |
(பொ - ள்) இவ்வுடல் நீங்குமாயின், இனிமேல் எவ்வகையான உடற்சுமையை எடுப்பரோ? (யாரறிவார்?) அதனால் இப்பிறவிலேயே உய்யும்படி பார்த்தல் வேண்டும்)
(182)
தோற்பாவை நாலாட் சுமையாகுஞ் சிவனொன்றிங் | கார்ப்பால் எடுத்ததெவ ராலே பராபரமே. |
(பொ - ள்) தோலாலாகிய பாவை போன்ற இவ்வுடம்பு உயிர் நீங்கினால் நாலாட்சுமையாகவிருக்கின்றது. இவ் வுடம்பின்கண் ஆருயிர் பொருந்திச் சுமப்பதற்குக் காரணம் யாதாகும்? (இருவினைக்கீடாகச் செலுத்தும் இறைவன் திருவாணையேயாம்.)
(183)
ஞாலத்தை மெய்யெனவே நம்பிநம்பி நாளுமென்றன் | காலத்தைப் போக்கியென்ன கண்டேன் பராபரமே. |
(பொ - ள்) இந் நிலவுலகத்தை ஒருகாலத்தும் அழியாதிருக்கும் மெய்ப்பொருளென்று அடியேன் மீட்டும் மீட்டும் நம்பி நம்பி எந்த நாளும் எளியேனுடைய காலத்தை வீணாகப் போக்கினேன். அதனாற் கண்ட பயன் யாது? (ஒன்றுமில்லை.)
(184)
பொய்யுலக வாழ்க்கைப் புலைச்சேரி வாதனைநின் | மெய்யருளின் மூழ்கின் விடுங்காண் பராபரமே. |
(பொ - ள்) நிலையில்லாத மாயா காரிய வடிவமாகவுள்ள இவ்வுலக வாழ்க்கை ஒரு புலைச்சேரியை ஒக்கும். அதனால் ஏற்படும் பயிற்சிப் பற்றென்னும் தீநாற்றம் நின்னுடைய நிலைபெற்ற திருவருளின்கண் அவ்வருளால் அழுந்தி முழுகின் நீங்கியொழியும்.
(185)
நூலேணி விண்ணேற நூற்குப் பருத்திவைப்பார் | போலே கருவிநன்னூற் போதம் பராபரமே. |
(பொ - ள்) வானத்திற்கு ஏறும்பொருட்டு ஒருவர் நூலேணி அமைக்க முற்படுகின்றனர். அவர் அதற்கு வேண்டும் நூல் தேட முற்படுகின்றனர். முற்பட்டுப் பருத்திச் செடியுண்டாகப் பருத்தி விதைக்கின்றனர் என்பதனோடொக்கும். அது போன்றதே உலகியல் நூல்களைக் கற்பதனால் திருவடியை அடையலாம் என முயல்வது.
(186)
சின்னஞ் சிறியார்கள் செய்தமணற் சோற்றையொக்கும் | மன்னுங் கலைஞான மார்க்கம் பராபரமே. |