பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


561


கொல்லா விரதமொன்று கொண்டவரே நல்லோர்மற்
றல்லாதார் யாரோ அறியேன் பராபரமே.
     (பொ - ள்) கொல்லாமையாகிய சிறந்த நோன்பினைக் கடைப்பிடித்து ஒழுகுவோரே நல்லவரென நவிலுதற்குரியராவர். கொலை புரிவோரை எப்பெயரான் அழைப்பதென விளங்கவில்லை. அதனால் சொல்ல அறியேன் என்பதாம்.

     (வி - ம்) நல்லார்: செந்தமிழ் திருமாமறைகளிற் காணப்படும் செம்பொருட்டுணிவாம் சித்தாந்த நன்னெறி யொழுகும் நாட்டத்தர். பொல்லார் அந்நெறியில் இன்னும் புகுதாதவர். ஆனால் படிப்படியாப் புகுதரும் வாய்ப்பினர்; அவர் பொறுக்கும் குற்றங்களைப் பெரும்பாலும் அறியாமை வயப்பட்டுப் புரிவார். கொலைபுலை புரிவோர் வடிவத்தால் நாட்டில் வாழும் மக்கள்போல் தோன்றப்பட்டாலும் காட்டில் வாழும் கொடு விலங்கினும் கொடியவரே. அதனால், அவர் பொல்லாரென்னும் சொல்லுக்கு உரியராகார். பொல்லா விலங்கெனல் பொருந்தும்.

(192)
இல்லாத காரியத்தை இச்சித்துச் சிந்தைவழிச்
செல்லாமை நல்லோர் திறங்காண் பராபரமே.
     (பொ - ள்) நிலையில்லாத மாயாகாரியப் பொருள்களை நிலைக்குமென மயங்கி அப் பொருள்களின்மேல் பற்றுக்கொண்டு மனம்போன வழியே போகாது மெய்ப்பொருட் சார்பில் நிலைத்துநிற்றல் நல்லவர் நற்றிறமாகும். இல்லாத - நிலையில்லாத.

(193)
ஏதுவந்தும் ஏதொழிந்தும் என்ன துயான் என்னார்கள்
போதநிலை கண்ட புலத்தோர் பராபரமே.
     (பொ - ள்) மெய்யுணர்வு கைவந்த மேலாந்தவத்தோர் உலகியன் முறையால் எத்தகைய செல்வம் வந்து பொருந்தினாலும், அல்லது இருந்தது அழிந்தாலும் அதுபற்றி யான் எனது என்னும் செருககுக் கொண்டு முனைப்புறார்.

(194)
ஆயிரஞ்சொன் னாலும் அறியாத வஞ்சநெஞ்சப்
பேயரொடு கூடிற் பிழை நாண் பராபரமே.
     (பொ - ள்) கற்றுத் திறம்படப் பேசுவது மட்டும் கைவந்தோர் அளவில்லாமல் பேசினாலும், அவர் கரவாடும் வன்னெஞ்சர். அத்தகைய பேயரோடு இணங்குதல் பெரும்பிழையாகும்.

(195)
மாய மயக்கொழிந்தார் மற்றொன்றை நாடுவரோ
நேய அருள்நிலையில் நிற்பார் பராபரமே.
     (பொ - ள்) மாயாகாரியப் பொருள்களில் ஏற்படும் மயக்கம் திருவருளால் நீங்கப்பெற்றவர். அப் பொருள்களிலொன்றையும் ஒரு சிறிதும் விரும்பார். திருவருளிலேயே உறுதியாக நிலைத்து நிற்பர்.

(196)