பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

570
எய்தியவன் தொழுது முன்னின்று பத்தராம் படி1 செய்த லோடொக்கும். இதுபோன்றதே ஆருயிர்களை அருள்வழிப்பட்டு ஒழுகுமாறு செய்தல்.

(238)
 
ஆசையுன்மீ தல்லால் அருளறிய வேறுமொன்றில்
பாசம்வையேன் நின்கருணைப் பாங்காற் பராபரமே.
     (பொ - ள்) தேவரீருடைய திருவருட் பாங்கினால் அடியேன் காதல் நின் திருவடிக்கண்ணேயாம்; நின்திருவருளறிய வேறு ஒரு பொருளின்கண்ணும் விருப்பம் வையேன்.

(239)
 
ஆதியந்த நீகுருவாய் ஆண்டதல்லால் நின்னையன்றிப்
போதனையும் உண்டோ புகலாய் பராபரமே.
     (பொ - ள்) தேவரீர் குருவாய் எழுந்தருளி வந்து அடியேனைத் தடுத்தாட்கொண்டருளீய தொடக்கத்திலும் தேவரீரே வந்ததல்லாமல் வேறில்லை. அதுபோல் முடிவிலும் நின்திருவடியை யன்றி வேறு மொரு போதனையுமுண்டோ? புகன்றருள்வாயாக.

(240)
 
தானாக வந்து தடுத்தாண் டெனையின்ப
வானாகச் செய்தஇன்ப வானே பராபரமே.
     (பொ - ள்) அடியேனை ஆண்டருளும் பொருட்டு நாயனீர் தானாக வலியவந்து தடுத்தாண்டு எளியேனை இன்பவானெனப்படும் திருச்சிற்றம்பலத்தின்கண் ணாக்கின பேரின்பப் பெருவெளியே.

(241)
 
பற்றற் றிருக்குநெறி பற்றிற் கடல்மலையுஞ்
சுற்ற நினைக்குமனஞ் சொன்னேன் பராபரமே.
     (பொ - ள்) உலகியற் பொருள்களில் பற்றுக்கொள்ளாது (நின் திருவடியே பற்றாக) இருக்கு நன்னெறியில் அடியேன் உறைத்து நிற்க விரும்பினால் எளியேன் மனம் ஆழ நீளம் அகலம் அறிய வொண்ணாக் கடலினும் மலையினும் சுற்றித் திரிய எண்ணி முனைகின்றது. இதனைத் தேவரீர் திருமுன் விண்ணப்பித்துக்கொள்கின்றேன். (நின் திருவருள் அம் மனத்தினை அடக்கியருள வேண்டும் என்பது விண்ணப்பம்).

(242)
 
படிப்பற்றுக் கேள்வியற்றுப் பற்றற்றுச் சிந்தைத்
துடிப்பற்றார்க் கன்றோ சுகங்காண் பராபரமே.
     (பொ - ள்) உலகியற் கருவி நூல்களைப் படிப்பதும் அமைந்து படித்தார் சொல்லக் கேட்பது நீங்கி, உலகியற் பொருள்களில் ஒரு சிறிதும் பற்றில்லாமல், உள்ளத் துடிப்புகளும் இல்லாமல் நன்னெறியின்கண் உறைத்து நின்றவர்க்கன்றோ திருவடிப் பேரின்பம் உண்டாகும்?

(243)
 
 1. 
'களித்துக்'. 4. 92 - 7.