(பொ - ள்) உள்ளத்தின்கண் வேறெந் நினைப்புமின்றித் திருவடி நினைப்பு ஒன்றேயாய்நின்றவர் வேறுபாடில்லாத சமாதியென்னும் நிட்டையினை எய்தியவராவர். அவர்தம் திருமேனி தீபத்தின்கண் வைக்கப்பட்ட கருப்பூரம் போன்று ஒளியாகவே விளங்கும்.
(வி - ம்.) மணிவாசகர் என்னும் ஆளுடைய அடிகள் திருவருளால் தாம் பாடியருளிய திருவாசகம் திருச்சிற்றம்பலக் கோவையார் என்னும் இருபெருந் தனித்தமிழ் மறைகளை அந்தணத்திருக் கோலத்துடன் எழுந்தருளி வந்து எழுதியருளிய அம்பலவாணரே அம் மறைகளுக்குரிய செம்பொருளாவர். அவரே இத் தில்லைத் திருச்சிற்றம்பலவரென அம்பலவாணர் திருமுன்நின்று உணர்த்தியருளினர். அக்கணமே அடிகள் கருப்பூர தீபம் போன்று கூத்தப்பெருமான் பேரொளியில் ஒன்றிக் கலந்து ஒளியாய் உடனானார்.
(245)
ஆதிகா லத்தில்எனை ஆண்டனையே இப்பால்நீ | போதியெனில் எங்கேநான் போவேன் பராபரமே. |
(பொ - ள்) அடியேனைத் தடுத்தாட்கொண்டருளிய பழங்காலத்தே எளியேனை ஆண்டுகொண்டருளினை; இப்பொழுது ஏழையேனை நீ போவாயாக என்றருளினால், நாயேன் எங்கே போவேன்?
(246)
நாவழுத்துஞ் சொல்மலரோ நாளுதிக்கும் பொன்மலரோ | தேவையுனக் கின்னதென்று செப்பாய் பராபரமே. |
(பொ - ள்) திருவருளால் மெய்யடியார்கள் காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கித் தம் நாவினால் வழுத்திப் பாடும் தூய சொன்மலரோ? அல்லது நீர்ப்பூ. நிலப்பூ, கோட்டுப்பூ, கொடிப்பூ என்று சொல்லப்படும் நால்வகை நறுமணப் பூக்களை அவை போதாகி ஒவ்வொரு நாளும் நிற்கு நிலையில், எடுத்துக்கொண்டு வந்து நறுமணமாலை கட்டி நின்திருவடிக்குச் சாத்தி வழிபடச் செய்யும் பொன்மலரோ? உனக்குப்பெருவிருப்ப முள்ளது. இறைவன் பாமாலைக்கு மிகுந்த பரிவுகொள்வன்.
(247)