(பொ - ள்) பேரின்பப் பெரும்பே றெய்த வேறுபாடற்ற ஒருமை உள்ளத்தொடுக்க நிட்டையினை இப்பொழுதே தந்தருள் வாயாக. தாராதொழியின் அடியேனால் இவ்வுலகியற்றுன்பத்தினைப் பொறுக்க முடியாதென்னும் மெய்ம்மையினை விண்ணப்பித்துக் கொள்கின்றேன்.
(352)
கற்குநிலை கற்றால் கருவியவி ழாதருளாய் | நிற்குநிலை கற்பதுவே நீதம் பராபரமே. |
(பொ - ள்) உலகியலுக்கு வேண்டுங் கல்விகளைக் கற்றுக் கொண்டிருந்தால் அதற்குக் கருவிகளாகிய அகப்புறக் கரணங்களெனப்படும் மெய்கள் (தத்துவங்கள்) கழன்று நீங்காது. திருவருள் வயப்பட்டு அவ்வருளாய் நிற்குநிலை கற்றுக்கொள்வதே முறையாகும். முறை - நீதம்; நீதி.
(353)
காச்சச் சுடர்விடும்பொற் கட்டிபோல் நின்மலமாய்ப் | பேச்சற் றவரே பிறவார் பராபரமே. |
(பொ - ள்) பொன்னானது புடமிட்டுக் காய்ச்சச் சுடர்விட்டு ஒளிர்வது போன்று, மாசில்லாதவராய்ப் பேச்சற்ற மவுன நிலையினை அடைந்தவரே திருவடியிணையினை யணைந்து பிறவாப் பெரும் பேறெய்துவர்.
(354)
பற்றொழிந்து சிந்தைப் பதைப்பொழிந்து தானேதான் | அற்றிருப்ப தென்றைக் கமைப்பாய் பராபரமே. |
(பொ - ள்) திருவருளால் உலகுடற் பற்றுக்கள் ஒழிந்து உள்ளத்துடிப்பு நீங்கி ஆருயிர்கள் தம்மை மாயாகாரியமாகிய உலகுடல் கரணங்களுக்கு வேறெனக் கண்டவிடத்துச் செருக்கினாலும், அவாவினாலும் தம்மையே முதல்வனாக மதிக்கும் தவறும் அற்றுத் திருவருள்வயமாய் அடங்கி நிற்கும் பெருநிலையினை அமைத்தருள்வது எந்நாளோ?
(355)
உருவெளிதான் வாதவூர் உத்தமர்க்கல் லாலினமுங் | குருவழிநின் றார்க்குமுண்டோ கூறாய் பராபரமே. |
(பொ - ள்) ஆலமர் செல்வனாம் தென்முகக் கடவுளின் திருக்கோலமாய் எழுந்தருளியிருந்து திருவாதவூரடிகளாந் தலையாயினர்க்கு அருளியதல்லாமல், சிவகுருவின் அருள்வழி நின்று வழிபடும் ஏனையார்க்கும் இனிமேலும் காட்சி தந்தருள்வையோ? திருவாய் மலர்ந்தருள்வாயாக.
(356)
தேகம்யா தேனுமொரு சித்திபெறச் சீவன்முத்தி | ஆகுநெறி நல்லநெறி ஐயா பராபரமே. |
(பொ - ள்) சிறப்புயிர் என்று சீவன்முத்தி நிலையினரைக் குறிப்பர்; அத்தகைய நிலையில் யோகசித்தியோ, பதமுத்தியோ, பரமுத்தியோ அடையவேண்டுவது இவ்வுடம்பாலுள்ள பயனாகும். அதுவே