பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

592
     (பொ - ள்) தேவரீரைக் கண்டு கும்பிடப் பெறாமையினால் அடியேன் முகம் மிகவும் வாடியுள்ளது. அதனைக் கண்டு எளியேனை வாடாதிருக்கும்படி காத்தருளிய நின்பெருங்கருணைக்கு உறைவிடமாகிய நிறைவே.

(346)
 
புந்தியினால் நின்னடியைப் போற்றுகின்ற மெய்யடியார்
சிந்தையிறப் போநின் தியானம் பராபரமே.
     (பொ - ள்) தூய அறிவினால் தேவரீர் திருவடியைப் போற்றித் தொழுகின்ற மெய்யடியார் நாட்டமாகிய சிந்தை யொடுங்கிய நிலையின் கண் நின்திருவடி யுள்குதலாகிய தியானம் கை கூடும்.

(347)
 
உனக்குவமை யாக்கருணை உள்ளவரும் வன்மைக்
கெனக்குவமை யானவரும் இல்லை பராபரமே.
     (பொ - ள்) நாயனீரே! பேரருட்டிறத்தில் நுமக்கு ஒப்பானவரும், கடின உள்ளத்தில் அடியேனுக்கு ஒப்பானவரும் வேறு எவரும் இலர்.

(348)
 
தாயிருந்தும் பிள்ளை தளர்ந்தாற்போல் எவ்விடத்தும்
நீயிருந்தும் நான் தளர்ந்து நின்றேன் பராபரமே.
     (பொ - ள்) பேரன்புடன் பெற்று வளர்த்த நற்றாய் அருகிருந்தும் அப் பிள்ளையானது தளர்ச்சியினை அடைதல் போன்று தேவரீர் நீக்கமற நிறைந்திருந்தும் அடியேன் மனத் தளர்ச்சி யுற்று நின்றேன். (இந்நிலை நின் திருவருளுக்குத் தக்கதுதானோ?)

(349)
 
வாயாற் கிணறுகெட்ட வாறேபோல் வாய்பேசிப்
பேயானார்க் கின்பமுண்டோ பேசாய் பராபரமே.
     (பொ - ள்) நன்மைக்குரிய கிணறு தன்வாயில் வெளியில் உள்ள மண் முதலிய பொருள்கள் காற்றினாலும் மக்களாலும் போடப்பட்டுத் தூர்ந்து கெட்டுவிடுவது போன்று, பத்தி மேலீட்டால் பணிசெய்து பரமனை யணைய வழி தேடாமல் வாயினால் நாளும் நாளும் பேசிப் பேசிப் பேய் நிலையடைந்தார்க்கு மெய்ப் பொருளின்பங் கைவருமோ? (மவுன நிலையடைந்தார்க் கன்றி ஏனையார்க்குக் கைவரா தென்க.)

(350)
 
பாவமென்றால் ஏதும் பயமின்றிச் செய்யஇந்தச்
சீவனுக்கார் போதந் தெரித்தார் பராபரமே.
     (பொ - ள்) செய்கையினும் விளைவினும் துன்பமே விளைக்கும் பாவச் செயல்களைச் சிறிதும் அச்சமின்றித் துணிந்து செய்யுமாறு இவ்வுயிர்க்கு அறிவூட்டினவர் யாவர்? தீச்சார்பினால் அவ்வறிவு தோன்றும் என்ப.)

(351)
 
இன்ப நிருவிகற்பம் இன்றேதா அன்றெனிலோ
துன்பம் பொறுப்பரிது சொன்னேன் பராபரமே.