பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

591
சிறிதும் இரக்சகமுறாது வஞ்சனை போன்று இருந்தருளுவதற்குரிய உட்கிடையாகிய உளவினைத் திருவாய் மலர்ந்தருள்வாயாக.

(340)
 
கற்பனையாப் பாடுகின்றேன் கண்ணீருங் கம்பலையுஞ்
சொற்பனத்துங் காணேன்எண் சொல்வேன் பராபரமே.
     (பொ - ள்) கற்ற கல்வியின் வியத்தகு திறத்தால் பிறர் மெச்சுமாறு அழகாகப் பாடுகின்றேனேயன்றி, அன்பு வழிப்பட்டு உள்ளம் உருகிப் பாடுகின்றேனில்லை. அதனால் உள்ள உருக்கத்தின் அடையாளமாகிய இன்பக் கண்ணீரும், மெய்ந்நடுக்கமும் எளியேன்பாற் கனவினும் வருவதில்லை. ஏழையேன் வினையை என்னென்று கூறுவேன்!

(341)
 
வன்பொன்று நீங்கா மனதிறப்ப மாறாப்பேர்
அன்பொன்றும் போதும்எனக் கையா பராபரமே.
     (பொ - ள்) இரும்பினும் வலிதாகிய எளியேன் மனத்துள்ள அக் கடினத்தன்மையொன்றும் அறவே அற்றொழிய நின்திருவடிக்கண் மாறாப் பேரன்பினை அடியேன் கொள்ளுமாறு திருவுள்ளங் கொண்டருள்வாயானால் அதுவே ஏழையேனுக்குப் போதுமானதாகும்.

(342)
 
ஏதுந் தெரியா எளியேனை வாவெனநின்
போதநிலை காட்டிற் பொறாதோ பராபரமே.
     (பொ - ள்) உண்மைத் தன்மை ஒரு சிறிதும் தெரிந்துகொள்ளும் திறமில்லாத ஏழையேனைத் தேவரீர் திருமுன் வருவாயாக வென்று திருவாய் மலர்ந்து அழைத்தருளி நின்திருவடியுணர்வினைக் காட்டியருளின் அவ்வருளிப்பாட்டினை அடியேன் பொறுக்கலாற்றேனோ?

(343)
 
ஓராமல் எல்லாம் ஒழிந்தேற்குன் தெய்வஅருள்
தாரா திருக்கத் தகுமோ பராபரமே.
     (பொ - ள்) உலகியற் பற்றும் நோக்கமும் ஒரு சிறிதுமின்றி நீங்கி நிற்கும் அடியேனுக்கு நின் தெய்வத் திருவருளினைத் தந்தருளாதிருப்பது நின்பெரும் அந்தண்மைக்குத் தகுதியாமோ? (ஆகாதென்க.)

(344)
 
மோனந் தருஞான மூட்டி எனக்குவட்டா
ஆனந்த வாழ்க்கை அருளாய் பராபரமே.
     (பொ - ள்) மவுன நிலையினைத் தருதற்கு ஏதுவாகிய நின் திருவடி உணர்வினை அடியேனுக்கு மேலோங்கச் செய்து அது காரணமாகத் தெவிட்டாத பேரின்பப் பெருவாழ்வினை அருள்வாயாக.

(345)
 
வாடுமுகங் கண்டென்னை வாடாம லேகாத்த
நீடுங் கருணை நிறைவே பராபரமே.