பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

590
பந்த மயக்கிருக்கப் பற்றொழிந்தேன் என்றுளறும்
இந்த மயக்கம் எனக்கேன் பராபரமே.
     (பொ - ள்) பிறவிப் பிணிப்பின் மயக்கம் நீங்காதிருக்க உலகப்பற்று விட்டுவிட்டேன் என்று உளறித் திரியும் இம் மயக்கத்தால் எளியேனுக்கு வரும் பயன் யாது? (ஏதுமின்றாம்.)

(336)
 
காட்சியெல்லாங் கண்ணைவிடக் கண்டதுண்டோ யாதினுக்கும்
ஆட்சி உனதருளே அன்றோ பராபரமே.
     (பொ - ள்) உலகியலின்கண் ஒழுக்கந்தவிராது நுகரப்படுங் காட்சிகள் அனைத்தும் கண்ணையின்றிக் காணமுடியாதவாறு போன்று எப்பொருளும் எவ்வுயிரும் சிறப்பெய்துவது யாண்டும் ஆதார நிலைக்களமாகவுள்ள, நின்திருவருளேயல்லது வேறுளதோ? (இல்லையென்ப.)

(337)
 
எட்டுத் திசையும்ஒன்றாய் இன்பமாய் நின்றவுன்னை
விட்டுப் பிரியவிடம் வேறோ பராபரமே.
     (பொ - ள்) பெருந்திசை நான்கும், கோணத்திசை நான்குமாகிய எட்டுத் திசைகளிலும் நீக்கமற நிற்கும் ஒரே முழு நிறைவாம் பேரின்பப்பெரும் பேறாய் நின்றருளும் தேவரீரை, அடியேன் விட்டுப் பிரிந்து இன்பமாய் வாழுதற்கு வேறு இடமும் உண்டாமோ? (இல்லையென்பதாம்.)

     (வி - ம்.) பெருந்திசை நான்கு : கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என்பன. கோணத்திசை நான்கு : தென்கிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு, வடகிழக்கு என்பன.

(338)
 
பிரியா துயிர்க்குயிராய்ப் பின்னமற வோங்குஞ்
செறிவே அறிவே சிவமே பராபரமே.
     (பொ - ள்) யாண்டும் ஆருயிரை விட்டு நீங்காது அவ்வுயிர்க்கு உயிராய் வேறறக் கலந்தோங்கும் செறிவே, மிக்கோங்கிப் பேரின்பம் அருளும் அறிவே, பேரின்பப் பெருவடிவாம் சிவனே.
     (வி - ம்.) பிரியாதுயிர்க்குயிராய் நின்றருள்வது சீலமெனவும், பின்னமற வோங்குவது நோன்பெனவும், ஒருபுடையொப்பாகக் கொள்ளின் எஞ்சிய செறிவும் அறிவும் அடுத்துவருவன காணலாம். சிவன் ஆவிப் பேறாகிய பேரின்பத் துய்ப்பு நிலையென்க. அப்பர் முதலிய நன்னெறி நால்வரருளிய நற்றமிழ் நான்மறை நாற்படி விளக்கும் திருமுறையாகவும் திருச்சிற்றம்பலக் கோவையார் ஆவிப்பேறாகவும் கொள்ப.

(339)
 
ஏதேது சொன்னாலும் எள்ளளவும் நீயிரங்காச்
சூதே தெனக்குளவு சொல்லாய் பராபரமே.
     (பொ - ள்) அடியேனுடைய குறைகளை எல்லாம் எவ்வெவ்வகையாக எத்துணைமுறை எடுத்துக் கூறினாலும் நாயனீரே! நும்திருவுள்ளம்