(வி - ம்.) எப்பொழுதும் கனவினுக்கும் நினைவின் மிகுதி அடிப்படையாகும். கனவு நனவின்கண் கண்டவாறே வந்து பொருந்தினால் பயன்தரும். அதனால் நனவின்கண் எழுந்தருள வேண்டுமென வேண்டுவதாகும். கனவினியல்பு வருமாறு :
| "ஓர்த்த திசைக்கும் பறைபோல் நெஞ்சத்து |
| வேட்டதே கண்ட கனா." |
| - கலித்தொகை 92. |
(330)
மால்வைத்த சிந்தை மயக்கறஎன் சென்னிமிசைக் | கால்வைக்க வுங்கனவு கண்டேன் பராபரமே. |
(பொ - ள்) உலகியற் பொருள்களில் அடியேன் உள்ளம் சென்று மயங்குகின்ற மயக்கம் நீங்க எளியேன் முடியின்மீது தேவரீர் திருவடி வைத்தருளவும் கனவு கண்டேன்.
(331)
மண்ணான மாயையெல்லாம் மாண்டுவெளி யாகஇரு | கண்ணார வுங்கனவு கண்டேன் பராபரமே. |
(பொ - ள்) நிலமுதலாகக் காரியப்படும் மூலப்பகுதி மாயை முற்றும் அடியேன் உள்ளத்தினின்றும் நீங்கி அங்குத் திருவருள் வெளியே உணர்வு ஒளியாகக் காணும்படி கனவு கண்டேன்.
(332)
மண்ணீர்மை யாலே மயங்காதுன் கையால்என் | கண்ணீர் துடைக்கவும்நான் கண்டேன் பராபரமே. |
(பொ - ள்) உலகியல் நிலையால் அடியேன் மயங்காது திருவருள் நிலையால் நிற்குமாறு தேவரீர் ஆசிரியத்திருக்கோலங் கொண்டருளி வந்து எளியேன் கண்ணீரை நின்திருக்கையால் துடைத்தருளவுங் கனவு கண்டேன்.
(333)
உள்ள துணரா வுணர்விலிமா பாவியென்றோ | மெள்ளமெள்ளக் கைநெகிழ விட்டாய் பராபரமே. |
(பொ - ள்) மெய்ப்பொருளுண்மை தெளியும் உணர்வில்லாத கொடிய பெரும்பாவியென்று திருவுள்ளங் கொண்டோ எளியேனை மெள்ள மெள்ளக் கைசோர விட்டருளினை.
(334)
எல்லாம் நினதுசெயல் என்றெண்ணும் எண்ணமும்நீ | அல்லால் எனக்குளதோ ஐயா பராபரமே. |
(பொ - ள்) அறிவிலா உலகின்மாட்டும், சுட்டறிவும் சிற்றறிவுமுடைய ஆருயிர்கள்மாட்டும் காணப்படும் இயக்கங்கள், அனைத்தும் நின்திருவருள் இயைந்தியக்கும் இயக்கத்தால் இயங்குவன என்னும் மெய்ம்மை எண்ணம் அடியேனுக்கு உண்டாக வேண்டுவதும் நின்திருவருட் குறிப்பினால் ஆவதாம். அவ்வெண்ணமும் நின்திருவருள் எண்ணத்தாலன்றி எளியேனுக்கு உண்டாகுமோ? (உண்டாகாதென்பதாம்.)
(335)