(பொ - ள்) அகத்தவமாம் உள்குதலால் - தியானத்தான் உள்ளம் உருகவும்; காட்சிப் பேற்றால் உடல் குழையவும், திருவருள் கை வருதலால், நெஞ்சத்துள்ள வஞ்சம் அஞ்சியகலவும் தேவரீரை எந்நாளில் காணப் பெறுவேன்?
(361)
பட்டப் பகல்போலப் பாழ்த்தசிந்தை மாளின்எல்லாம் | வெட்டவெளி யாக விளங்கும் பராபரமே. |
(பொ - ள்) ஆணவவல்லிருளாம் களங்கம் சிறிதுமில்லாமல் அடியேனுடைய பாழான நெஞ்சம் பட்டப்பகல்போல் தூவெளியாய் ஒடுங்கிவிடின், உலகியற் பொருள்கள் அனைத்தும் திருவருளுருவாய் விளங்கும்.1
(362)
பார்க்கின்அணுப் போற்கிடந்த பாழ்ஞ்சிந்தை மாளின்என்னை | யார்க்குச் சரியிடலாம் ஐயா பராபரமே. |
(பொ - ள்) ஆராயுமிடத்து மிக நுண்ணியவாய்க் கிடந்த எளியேனுடைய பாழான நெஞ்சம் திருவருளால் ஒடுங்கிவிடின் அடியேனை யாவர்க்கு ஒப்பாகச் சொல்வேன்? (உலகங் கடந்த திருவடியுணர்வினர்க்கு ஒப்பாகலாம் என்க.)
(363)
பாட்டுக்கோ அன்பினுக்கோ பத்திக்கோ அன்பர்தங்கள் | நீட்டுக்கெல் லாங்குறுதி நின்றாய் பராபரமே. |
(பொ - ள்) சிவனடியார்களுடைய தென்றமிழ் மந்திரப்பாட்டுக்கு மட்டுமா? பேரன்பினுக்கு மட்டுமா? பெரும் பத்தியினுக்கு மட்டுமா? அவர்தம் ஏவலுக்கும் எல்லாம் அண்மையாக நின்றருளினை.
(364)
முத்தாந்த வித்தே முளைக்குநில மாயெழுந்த | சித்தாந்த மார்க்கச் சிறப்பே பராபரமே. |
(பொ - ள்) திருவடிப் பேற்றின் சிறப்பினுக்குக் காரணமே, அத்திருவடிப்பேறு கை கூடுதற்கு விளைநிலமாயெழுந்த மெய்கண்ட நன்னெறியாம் சித்தாந்தச் செந்நெறிச் செம்பொருளே.
(365)
உன்னா வெளியாய் உறங்காத பேருணர்வாய் | என்னாவிக் குள்ளே யிருந்தாய் பராபரமே. |
(பொ - ள்) அடியேனின் ஆருயிரிடத்து நினைத்தற்கரிய அருட் பெருவெளியாய், தளர்விலாப் பேருணர்வாய்த் தேவரீர் வீற்றிருந்தருளினீர். உன்னுதல் - நினைத்தல். உறங்குதல் - தளர்தல்.
(366)
தத்துவமெல் லாமகன்ற தன்மையர்க்குச் சின்மயமா | நித்தமுத்த சுத்த நிறைவே பராபரமே. |
1. | 'மாதர்ப் பிறைக்கண்ணி.' 4. 3 - 1. |