(பொ - ள்) திருவருளால் மெய்களெனப்படும் தத்துவங்கள் முப்பத்தாறையும் கடந்துள்ள திருவடியுணர்வு கைவரப்பெற்ற மெய்யன்பர்க்குப் பேருணர்வாய், என்றும் பொன்றுதலில்லதாய், மாசிலாப் பெருநிறைவாய்த் திகழ்கின்ற விழுமிய முழு முதல்வனே!
(367)
உள்ளக் கொதிப்பகல வுள்ளுள்ளே ஆனந்த | வெள்ள மலர்க்கருணை வேண்டும் பராபரமே. |
(பொ - ள்) அடியேனுடைய உள்ளத்தின் உலகியற்றுடிப்பு நீங்கவும், உணர்விற்குணர்வாய்ப் பேரின்பப் பெருவெள்ளமாகத் திருவருள் நிறைந்து திகழவும் எளியேன் வேண்டுவேன்.
(368)
என்னைப் புறப்பதரு ளின்கடனாம் என்கடனாம் | நின்னிற் பணியறவே நிற்கை பராபரமே. |
(பொ - ள்) அடியேனைக் குறிக்கொண்டு சிறப்பாகக் காத்தருள வேண்டுவது தேவரீரின் திருவருட் கடனாகும். எளியேன் கடமை நும் திருப்பணியில் முற்றாக நிற்றல். இதுவே இறைபணியெனப்படும் அடிமையின் கடமையாம்.
(369)
தானேயா நன்னிலையைத் தந்தஅருள் ஆனந்த | வானே மனாதீத வாழ்வே பராபரமே. |
(பொ - ள்) (அடிமையுள்ளத்தில் ஆண்டான் திருவடி அழுந்த நிற்றற்காம் சிவ நினைவினை இடையறாது கொள்ளுதலே சிவோகம் பாவனை என்ப.) இப் பாவனையால் சிவம் தானேயான அந்நன்னிலையினைக் கொடுத்தருளிய பேரின்பப் பெருவெளியே, மனத்துக்கு எட்டாத வாழ்வே.
(370)
மண்ணாதி பூதமெல்லாம் வைத்திருந்த நின்னிறைவைக் | கண்ணாரக் கண்டு களித்தேன் பராபரமே. |
(பொ - ள்) மண்முதலாகச் சொல்லப்படும் முப்பத்தாறு மெய்களாகிய இவ்வுலகுடல்கள் அனைத்தும், தேவரீர் பெருவெளியிலடங்கக் காணப்படும் உண்மையினை நின் பெருநிறைவாகிய வியாபகத்தின்கண் கண்டேன். கண்ட அப்பொழுதே அவ்வுண்மையினை அடியேன் கண்கூடாகக் கண்டுகொண்டு களித்தேன்
(வி - ம்.) அரும்பாடுபட்டுப் படிவழி யேறி மலையுச்சியில் நின்றான் ஒருவன் கீழ் நோக்கி உற்றுப் பார்ப்பின் எல்லாப் பக்கங்களிலுமுள்ள எல்லாப் பொருள்களையும் நுண்மையாக எளிதினுணர்வன். இது மேலதற்கு ஒப்பாகும்.
(371)
அறியாமை ஈதென் றறிவித்த அன்றேதான் | பிறியா அருள்நிலையும் பெற்றேன் பராபரமே. |
(பொ - ள்) திருவருளானது அறிவை மறைப்பதாகிய அறியாமையைச் செய்துவரும் ஆணவ வல்லிருளின் தன்மையீதென்று உணர்வினிலுணர்த்தி யருளிய