பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

597
போதே நின்னை (தேவரீரை) விட்டுப் பிரியாதிருக்கும் அறிவாற்றலாகிய திருவருளினையும் அடியேன் அணையப் பெற்றேன்.

(372)
 
தீதெனவும் நன்றெனவுந் தேர்ந்ததுநான் தேர்ந்தபடி
ஏதும் நடக்கவொட்டா தென்னே பராபரமே.
     (பொ - ள்) உலகியல் வழக்கத்தாலும் உறுதி நூல்களின் உணர்வாலும் இது தீது, இது நன்று என ஆய்ந்து உணர்ந்தும், அடியேன் உணர்ந்தபடி தீதகற்றி நன்மை கடைப்பிடித்து ஒழுகாமைக்கு வாயில்யாதாகும்?

     (வி - ம்.) வினைப்பயன் நுகர்ந்து கழிக்க வேண்டிய முறைமையினால் மருத்துவன் போன்ற மறைப்பாற்றலால் அங்ஙனம் நிகழ்த்து விக்க நேர்வதாகும்.

(373)
 
கண்ட அறிவகண்டா காரமென மெய்யறிவில்
கொண்டவர்க்கே முத்தி கொடுப்பாய் பராபரமே.
     (பொ - ள்) ஒவ்வொன்றனையும் மாயா காரியக் கருவி வாயிலாகச் சுட்டியறிகின்ற ஒரு புடையறிவு எல்லைக்குட்பட்ட அறிவாகும். திருவருளைச் சார்ந்து அனைத்தையும் ஒருங்கே காணும் விரிந்த அறிவு வருதற்கு வாயிலாகிய நின்திருவடியுணர்வு கைவரப்பட்டவர்க்கே திருவடிப் பேரின்பப் பெரும் பேற்றைக் கொடுத்தருள்வாய்.

     (வி - ம்.) கண்டம் : வரையறைப்பட்ட எல்லையினை யுடையது. அகண்டம் : எல்லையில்லாது எங்கும் பரந்த பெருநிறைவினை யுடையது. ஆருயிர் உறைவிடத்துறும் உணர்வினையுடையது (வசித்திட வரும் வியாபி). கண், புறப்பொருள்களைப், பலகணி வழியாகவும், வாயில்வழியாகவும், வெள்ளிடையிலும் மலைமுகட்டிலும், பெருக்க ஆடி வாயிலாகவும், தொலைநோக்காடி வாயிலாகவும் காணும். அங்ஙனம் காணும் காட்சி யனைத்தும் ஒரு நிகரனவாகக் காணப்படுவன அல்ல. கண்ணானது தான் சார்ந்து காணும் கருவிகளுக்குத் தக்கவாறு காட்சியும் சிறுத்தும் பெருத்தும் காணப்படும். இதுபோல் ஆருயிர்களும் உடம்போடு கூடிக் காணும்பொழுது எல்லைக்குட்பட்டுச் சுட்டிக் காணும். அருளோடு கூடிக் காணும்பொழுது எல்லையின்றிச் சுட்டிறந்து காணும்.

(374)
 
ஈறாக வல்வினைநான் என்னாமல் இன்பசுகப்
பேறாம் படிக்கடிமை பெற்றேன் பராபரமே.
     (பொ - ள்) வல்வினையின் காரியம் ஈறெய்துதலாகிய முடிவினை எய்தும்படி, ஆணவக் கூறாகிய யான் எனது என்னும் முனைப்புச் சிறிதுந்தோன்றாது நின்திருவடிப் பேரின்பப் பெருவாழ்வே பேறாம் படிக்கு அடியேன் நின்திருவடிக்கு அடிமை பூண்டேன்.

     (வி - ம்.) ஒருவனை மாணவனாக ஏற்றுக்கொண்ட ஓராசான் அவனை நன்னிலையில் வைத்தருளும் கடப்பாட்டினன். அம் முறையில் தேவரீரும் அடிமைபூண்ட ஏழையேனைக் காத்தருளுதல் வேண்டும்.

(375)