பெற்றார் அநுபூதி பேசாத மோனநிலை | கற்றார் உனைப்பிரியார் கண்டாய் பராபரமே. |
(பொ - ள்) திருவருளால் சிவமெய்யுணர்வு கைவந்த தற்பேறாளரான நற்றவத்தவரும், உரையடங்கிய மோன நிலையினைக் கைவரப் பெற்றவரும் நின்திருவடியினைப் பிரியாத செம்பொருட் செல்வராவர். கண்டருள்வாயாக.
(வி - ம்.) சிவானுபூதி - சிவமெய்யுணர்வு. சிவானுபூதி - தற்பேறு. செம்பொருட்செல்வர் - சித்தாந்தச் சைவர்.
(376)
நீயேநான் என்று நினைப்பும் மறப்புமறத் | தாயே அனையஅருள் தந்தாய் பராபரமே. |
(பொ - ள்) சிவோகம் பாவனை எனப்படும் சிவமுதிர் நினைவால் தேவரீரே (சிவனே) அடியேன் என்று உலகியல் தொடர்பும் நின் திருவடி நினைப்பும் மறப்பும் அற அத் திருவடியிற் றங்கும்படியாகத் தாய் போன்ற திருவருளினைத் தந்தருளினை.
(வி - ம்.) கோலங் கொண்டார் அக் கோலத்துக்குரிய எல்லா இயல்புங் கூடியவராக இருப்பர். அதுபோல் ஆண்டான் அடியணைந்த ஆருயிர் அவ்வாண்டானாய்ப் பூண்டநிலை சிவோகம்பாவனைப் பொற்பாகும்.
(377)
சஞ்சலமற் றெல்லாம்நீ தானென் றுணர்ந்தேன்என் | அஞ்சலியுங் கொள்ளாய் அரசே பராபரமே. |
(பொ - ள்) திருவருளால் மனக்கவலை சிறிதுமில்லாமல், எல்லாப் பொருள்களும் நீ அசைத்தாலன்றி அசையா; அதனால் அப் பொருள்க ளனைத்தும் நீயே என்று சிறப்பித்துக் கூறுதல் பொருந்துமென்றுணர்ந்தேன். அடியேனுடைய கைகூப்பித் தொழும் வணக்கத்தையும் ஏற்றுக்கொண்டருள் வாயாக இறைவனே.
(வி - ம்.) வழி நிற்பாரை முதல்வராக வழங்குவதும் வழக்கேயாம். பிள்ளைகளைப் பெற்றோராகவும், மாணவரை ஆசானாகவும் வேலையாட்களை முதல்வராகவும் கூறுவது காண்க.
(378)
பூதமுதல் நாதவரை பொய்யென்ற மெய்யரெல்லாங் | காதலித்த இன்பக் கடலே பராபரமே. |
(பொ - ள்) பூதமுதல் நாத மீறாகிய முப்பத்தாறு மெய்களும் தோன்றி யொடுங்கும் தன்மைய. அதனால் அவற்றை நிலையிலலன என்பர். இவ்வுண்மையினை மெய்கண்ட நூலின் வாயிலாகத் தெளிந்து கொண்ட நல்லாரனைவரும் காதலித்துப் பத்தி கொள்ளும் பேரின்பப் பெருங்கடலே. நல்லார் - செம்பொருட்டுணிவினர்; சித்தாந்தச் செல்வர்.
(379)
வாக்குமனம் ஒன்றுபட்ட வார்த்தையல்லால் வெவ்வேறாய்ப் | போக்குடைய வார்த்தை பொருந்தேன் பராபரமே. |