(வி - ம்.) அழுக்கு - மலம். அழுக்கேறிய ஆடை - மலச்சார்பாகிய உடல். தூயவானம் - சுத்தமாயையின் வெளி. அதுவே சிவபெருமானின் தூய ஆடை. அதைத்தருதல் உடலைத் திருவருட் சார்பாக்குதல். இனி ஆடை என்பதைக் கலையெனக் கொண்டு கட்டிலான் சிவன் என்பதூஉமாம். கலை - கட்டு, தன்னைப்போல் அடியேனையும் மலப்பிணிப்பினின்று விடுவிப்பானோ எனவுமாம்.
(6)
உன்னாமல் ஒன்றிரண்டென் றோராமல் வீட்டுநெறி | சொன்னான் வரவும்வகை சொல்லாய்நீ பைங்கிளியே. |
(பொ - ள்) அடியேனுக்கு வேறாகச் சிவன் உள்ளதென்றோ சிவனுக்கு வேறாக அடியேனுக்குத் தனிநிலை யுண்டென்றோ, சிவனுக்கு வேறாக ஒரு பொருளுமில்லை; எல்லாம் சிவனென்றோ மாறுபட நினையாமல், ஆராய்தலும் செய்யாமல் ஆண்டான் அடிமைத்திறம் அறிவுறுத்தும் மெய்கண்ட நன்னெறியினை அடியேனுக்கு அருளிச் செய்த மவுன குரவன் இன்னம் ஒருமுறை எழுந்தருளிவரும் வகையினைச் சொல்வாயாக.
(7)
ஊருமிலார் பேருமிலார் உற்றார்பெற் றாருடனே | யாருமிலார் என்னை அறிவாரோ பைங்கிளியே. |
(பொ - ள்) (பிறப்பின்மையால்) தனக்கென ஓர் ஊருமில்லாதவர். பெயருமில்லாதவர். உற்றார் தாய்தந்தை முதலிய யாரும் இல்லாதவர். அடியேனை அறிந்து கொள்வரோ?
(8)
ஊரைப்பா ராமல்எனக் குள்ளகத்து நாயகனார் | சீரைப்பார்த் தாற்கருணை செய்வாரோ பைங்கிளியே. |
(பொ - ள்) வெளிமுகமாகக் காணப்படும் ஓர் ஊரினை நோக்காமல் அடியேன் உள்ளகத்து வீற்றிருக்கும் நாயகனார்தம் திருவடிச் சீரினை உண்முகமாகப் பார்த்தால் திருவருள் செய்வரோ? (செய்தருள்வரென்பதாம்.)
(9)
என்று விடியும் இறைவாவோ என்றென்று | நின்றநிலை எல்லாம் நிகழ்த்தாய்நீ பைங்கிளியே. |
(பொ - ள்) (அடியேனைச் சூழ்ந்திருக்கும் ஆணவவல்லிருள், நின் திருவருள் ஒளியினால் நீங்கப்பெற்று விடியும் நிலை எய்துவது எந்நாளிலோ? அடியேன் ஆருயிர்க்குரிய தலைவரே! அடுத்தடுத்து அடியேன் கூறி அல்லலுறும் நிலைமையனைத்தினையும் எடுத்து எளியேனின் தலைவர்க்கு மொழிவாயாக.
(10)
எந்தமட லூடும் எழுதா இறைவடிவைச் | சிந்தைமட லாலெழுதிச் சேர்ப்பேனோ பைங்கிளியே. |
(பொ - ள்) (உருவம், அருவுருவம், அருவம் என்று சொல்லப்படும் வடிவநிலைகள் மூன்றுங் கடந்த விழுமிய முழுமுதல்வனாகிய) எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவனும் பேரொடுக்கப் பெருந்தொழிலைச்