செய்தருளுபவனு மாகிய இறைவன் திருவடிவினை எத்தகைய மடலூடும் எழுதமுடியாது; ஆயினும் அடியேன் திருவருள்1 நினைவால் "உயிரா வணமிருந்து உற்று நோக்கி உள்ளக்கிழியாகிய எளியேன் நெஞ்சகமென்னும் மடலின்கண்2 எழுதிச் சேர்ப்பேனோ? (சேர்ப்பேன் என்பதாம்.)
(11)
கண்ணுள்மணி போல்இன்பங் காட்டி எனைப்பிரிந்த
திண்ணியரும் இன்னம்வந்து சேர்வாரோ பைங்கிளியே.
(பொ - ள்) கண்ணிற் கருமணிபோல் அடியேனைக் கலந்து, பெறுதற்கரிய பேரின்பந்தந்து, எளியேனைப் பிரிந்து, மீண்டுவாராத வன்னெஞ்சமுடைய அத் தலைவரும் இன்னமும் வந்து சேர்ந்தருள்வரோ?
(12)
ஏடார் மலர்சூடேன் எம்பெருமான் பொன்னடியாம்
வாடா மலர்முடிக்கு வாய்க்குமோ பைங்கிளியே.
(பொ - ள்) அடியேனின் ஆருயிர்த் தலைவர் வந்தருளும்வரை வாடுந் தன்மை வாய்ந்த இதழ்கள் பொருந்திய மலர் மாலையை எளியேன் முடியின்கண் சூடிக்கொள்ளேன்; எம்பெருமானின் திருவடியாகிய ஒரு காலத்தும் வாடுதலில்லாத நறுமலரை ஏழையேன் முடியின்கண் சூடிக் களிக்கும் பெரும்பேறு வாய்க்குமோ?
(13)
கல்லேன் மலரேன் கனிந்தஅன்பே பூசைஎன்ற
நல்லோர்பொல் லாஎனையும் நாடுவரோ பைங்கிளியே.
(பொ - ள்) தனித்தமிழ்த் திருமாமறை திருமாமுறையாகிய இன்றியமையாது கற்கவேண்டிய இறைநூல்களைக் கற்கின்றிலேன்; உள்ளத்தைத் திருவடியன்பின் வண்ணமாக மலரச் செய்கின்றிலேன். சீலமுதலிய நன்னெறி நாற்படியின் வாயிலாக ஏற்படும் சிறந்த அன்பே மெய்வழிபாடென மேற்கொண்டு ஒழுகும் சிவனடியார்களெனப்படும் நல்லார் அடியேனையும் ஒருபொருளாக நாடுவரோ? (நாடார் என்பதாம்.)
(14)
கண்டதனைக் கண்டு கலக்கந் தவிரெனவே
விண்டபெரு மானையும்நான் மேவுவனோ பைங்கிளியே.
(பொ - ள்) சிவகுருவாய் எழுந்தருளிவந்து நேர்முகமாகத் தன்னைக் காட்டினபோது அறிவினிடத்துங் காண்பாயாக வென்று செவியறிவுறுத்தருளிய பெருமானே அடியேன் இன்னும் ஒருமுறை காணும் பெரும்பேறு பெறுவேனோ? செவியறிவுறுத்தல் - உபதேசித்தல்.