காணாத காட்சி கருத்துவந்து காணாமல் | வீணாள் கழித்து மெலிவேனோ பைங்கிளியே. |
(பொ - ள்) ஆருயிர்களின் சுட்டறிவினாலும், சிற்றறிவினாலும் காணமுடியாத திருவருட் காட்சியினைக், கருத்தின்வழி உணர்விற்கண்டு கும்பிடாமல் வீணாக நாள்களைக் கழித்து மெலிவு எய்துவேனோ?
(16)
காந்தம் இரும்பைக் கவர்ந்திழுத்தா லென்னஅருள் | வேந்தன் எமைஇழுத்து மேவுவனோ பைங்கிளியே. |
(பொ - ள்) காந்தமானது இயைபுடைய இரும்பினை வலிய இழுத்துத் தன்வயமாக்கிப் புணர்ந்ததுபோல், திருவருள் வேந்தனாகிய சிவபெருமான் எளியேங்களை அடிமையாக்கி ஆண்டுகொண்டு கலந்தருள்வனோ?
(17)
காதலால் வாடினதுங் கண்டனையே எம்மிறைவர் | போதரவா யின்பம் புசிப்பேனோ பைங்கிளியே. |
(பொ - ள்) நீங்காத் திருவருட் காதலால் அடியேன் நாளும் நாளும் இளைத்துவரும் மெய்ம்மையினையுங் கண்டனையே. (பைங்கிளியே) எம் ஆருயிர்த் தலைவர் வந்தருளுவதால் அடியேன் பேரின்பம் நுகர்வேனோ?
(18)
கிட்டிக்கொண் டன்பருண்மை கேளாப் பலவடிகொள் | பட்டிக்கும் இன்பமுண்டோ சொல்லாய்நீ பைங்கிளியே. |
(பொ - ள்) மெய்யன்பருடன் மேவிக்கலந்து அவர் அறிவுறுத்தும், மாறா உண்மையினைக் கேளாமல், பல அடிகளையும் பட்டுத் துன்புற்றாலும் அசைந்து கொடாத பட்டிமாட்டுக்கு ஒப்பான அடியேனுக்கும் பேரின்பம் வாய்க்குமோ? சொல்வாயாக.
(19)
கிட்டூராய் நெஞ்சிற் கிளர்வார் தழுவஎன்றால் | நெட்டூர ராவர்அவர் நேசமென்னோ பைங்கிளியே. |
(பொ - ள்) மிக்க அன்பால் நினைத்தவுடன் அடியேன் மனத்தினுள் மிக நெருங்கிய ஊரினர் போன்று மேவிவிளங்குவர்; விளங்கியதும் தழுவ வேண்டுமென்று காதலால் முயலுவேனாயின். மிகத் தொலைவிலுள்ள ஊரவர் போன்று நீங்கிவிடுகின்றனர். எளியேனுக்குரிய இத்தகைய தலைவரது நட்பிருந்தவாறென்னோ?
(20)
கூறுங் குணமுமில்லாக் கொள்கையினார் என்கவலை | ஆறும்படிக்கும் அணைவாரோ பைங்கிளியே. |
(பொ - ள்) தனக்கென உலகியல் போன்ற ஒருதன்மையும், குணமும் இல்லாத கொள்கையினையுடைய எம்தலைவர் அடியேன் கவலை நீங்கும்படி எளியேனை வந்து தழுவுவரோ?
(21)