சின்னஞ் சிறியேன்றன் சிந்தைகவர்ந் தார்இறைவர் | தன்னந் தனியே தவிப்பேனோ பைங்கிளியே. |
(பொ - ள்) மிகவும் இளமைப் பருவம் வாய்ந்த அடியேனுடைய உள்ளத்தினைக் கவர்ந்து கொண்டனர் எம்தலைவர். எளியேன் தன்னந்தனிமையாயிருந்த பிரிவுத் துன்பம் பொறுக்கமுடியாது வாடுவனோ?
(22)
சிந்தை மருவித் தெளிவித் தெனையாள | வந்தகுரு நாதன்அருள் வாய்க்குமோ பைங்கிளியே. |
(பொ - ள்) அடியேன் மனத்துடன் கலந்து மெய்ம்மை தெளிவித்து எளியேனை ஆட்கொள்ள வந்த குருநாதரின் திருவருள் இன்னும் ஒருமுறை ஏழையேனுக்கு வாய்க்குமோ?
(23)
சொல்லிறந்து நின்ற சுகரூபப் பெம்மானை | அல்லும் பகலும் அணைவேனோ பைங்கிளியே. |
(பொ - ள்) (மாற்றம் மனங்கழிய நிற்கும் மறையோன் சிவன் ஆதலினால்) சொல்லுக்கடங்காது பேரின்பப் பெருவடிவாய்த் திகழும் பெருமானை இரவும் பகலுமாய் இடையறாது தழுவி இன்புற்றுக் கொண்டிருப்பேனோ?
(24)
தற்போதத் தாலே தலைகீழ தாகஐயன் | நற்போத இன்புவர நாட்செலுமோ பைங்கிளியே. |
(பொ - ள்) தானென்று முனைக்கும் செருக்காகிய தற்போதத்தினால் நான் தலைகீழாக நிற்கத் தலைவனது நல்ல மெய்யுணர்வின்பம் எளியேன்பா லுண்டாக நாள்கள் பல செல்லுமோ? தற்போதம் - தன்முனைப்பறிவு. போதம் - அறிவு.
(25)
தன்னை அறியுந் தருணந் தனிற்றலைவர் | என்னையணை யாதவண்ணம் எங்கொளித்தார் பைங்கிளியே. |
(பொ - ள்) தலைவராகிய சிவபெருமான்தன்னைப் புணர வேண்டுமென்று அடியேன் உன்னும்போது அத் தலைவர் எளியேனைத் தழுவியருளாது எங்கொளித் தருளினர்?
(26)
தாங்கரிய மையலெல்லாந் தந்தெனைவிட் டின்னருளாம் | பாங்கியைச் சேர்ந் தார்இறைக்குப் பண்போசொல் பைங்கிளியே. |
(பொ - ள்) அடியேனால் பொறுக்கமுடியாத பெருவேட்கையினை எளியேனுக்கு வலியத் தந்துவிட்டு, என்னைப் பிரிந்து தம் இனிய திருவருளாம் தோழியினைச் சேர்ந்த தலைவர்க்கு இது சிறந்த பண்பாகுமோ? சொல்வாயாக.
(27)
தாவியதோர் மர்க்கடமாந் தன்மைவிட்டே அண்ணலிடத் | தோவியம்போல் நிற்கின்எனை உள்குவரோ பைங்கிளியே. |