(பொ - ள்) நிலையில்லாமல் கிளைக்குக்கிளை ஓய்வின்றித் தாவிச் செல்லும் குரங்கினைப் போன்று (ஒருவனும் ஒருத்தியுமாக வாழும் நெறிமுறைக் கற்பினைக் கைவிட்டுப் பொருளாசையால் பலரைப் புணர்ந்து திரியும் விலைமகளைப் போன்று) பல தெய்வங்களை நாடிச் செல்லும் கற்பில்லாத நிலையினைக் கைவிட்டுக் கற்புநெறியினைக் கைக்கொண்டு உயிரோவியப்பாவை போன்று அடியேன் அடங்கி நிற்பேனாயின் தலைவர் அப்பொழுது எளியேனைத் திருவுள்ளங் கொண்டருள்வரோ?
(28)
தீராக் கருவழக்கைத் தீர்வையிட்டங் கென்னைஇனிப் | பாரேறா தாண்டானைப் பற்றுவனோ பைங்கிளியே. |
(பொ - ள்) நீங்கமுடியாத பிறவி வழக்கினைத் தீர்த்து அடியேனை இனிமேல் நிலவுலகத்தின்கண் வந்து தோன்றாதபடி ஆண்டு கொண்டருளிய தலைவனை இனி என்று சார்வேனோ?
(29)
தூங்கிவிழித் தென்னபலன் தூங்காமல் தூங்கிநிற்கும் | பாங்குகண்டால் அன்றோ பலன்காண்பேன் பைங்கிளியே. |
(பொ - ள்) ஒவ்வொரு நாளும் தன்முனைப்புணர்வுடன் தூங்கித்தூங்கி எழுந்திருப்பதனால் யான்கண்ட பயன் யாது? திருவருள் முனைப்புணர்வுடன் தூங்காமல் தூங்கி நிற்குந் தன்மை வாய்த்தாலல்லவோ அடியேன் தலைவனைக்கண்டு கும்பிடும் அரும்பயன் காண்பேன்?
(30)
தொல்லைக் கவலை தொலைத்துத் தொலையாத | எல்லைஇலா இன்பமயம் எய்துவனோ பைங்கிளியே. |
(பொ - ள்) பழைமையாகத் தொடர்ந்து வரும் பிறவிப்பெருங்கவலை திருவருளால் நீங்கப்பெற்று நீங்குதலில்லாத அழிவும் அளவுமில்லாத பேரின்பப் பெரும்பயனை எய்துவனோ?
(31)
நன்னெஞ்சத் தன்பரெல்லாம் நாதரைச்சேர்ந் தின்பணைந்தார் | வன்னெஞ்சத் தாலேநான் வாழ்விழந்தேன் பைங்கிளியே. |
(பொ - ள்) (இடையறாது சிவன் திருவடியை உள்கும் நெஞ்சம் நன்னெஞ்சம். உள்குதல் - தியானித்தல்.) நன்னெஞ்சத்தை யுடைய நின் திருவடி மெய்யன்பர் அனைவரும் நின் திருவடிப் பெருவாழ்வை எய்திப் பேரின்பம் உற்றனர். அடியேனுடைய வன்னெஞ்சத்தால் அப் பெருவாழ்வை இழந்து விட்டேன்.
(32)
நானே கருதின்வர நாடார்சும் மாஇருந்தால் | தானே அணைவரவர் தன்மைஎன்னோ பைங்கிளியே. |
(பொ - ள்) அடியேனைவிட்டு நீங்காதுறையும் தலைவர்தம் உண்மையினை மறந்து நீங்கி வேறாக இருப்பாரை நினைப்பதுபோல் அவரை அடியேன் நினைத்தால் வந்து எளியேனைத் தழுவவேண்டுமென்று தழுவத் திருவுள்ளங் கொள்ளார். (அடியேன் உன்னடிமையென்று உறுதியாக விருப்பதாகிய) வாளா விருந்தால் தாமாகவே