(பொ - ள்) பச்சைநிறத் திருமேனி யுடையவளாய்ச் செம்மை நிறம் பொருந்திய சிவபெருமானின் இடப்பாகத்தை இடமாகக் கொண்டருளியவளாய் உலகனைத்தையும் தன் தண்ணளியால் பெறாது பெற்றெடுத்த உமையம்மையாரை அடியேன் அவர் திருவருளால் காண்பது எந்நாளோ?
(7)
ஆதியந்தங் காட்டா தகண்டிதமாய் நின்றுணர்த்தும்
போதவடி வாம்அடியைப் போற்றுநாள் எந்நாளோ.
(பொ - ள்) தோற்றமும் இறுதியும் இல்லாத எங்கணும் முழு நிறைவாய் எவ்வுயிர்க்கும் உயிர்க்குயிராய் நின்றுணர்த்தும் பேரறிவே தன் வடிவாகக் காணப்படும் திருவருளின் திருவடியினைப் பூத்தூவிப் போற்றிமறை புகன்று போற்றி வழிபடுநாள் எந்நாளோ?
(8)
கங்கை நிலவுசடைக் காட்டானைத் தந்தையெனும்
புங்கவெண்கோட் டானைபதம் புந்திவைப்ப தெந்நாளோ.
(பொ - ள்) வான்புனல் தங்கும் திருச்சடைக் காட்டினையுடைய சிவபெருமானைத் தந்தையாகக் கொண்டுள்ள உயர்ந்த வெள்ளிய ஒற்றைக் கொம்பினையுடைய மூத்தபிள்ளையாரை அடியேன் உள்ளத்தினுள்ளே வைத்து வழிபடுவ தெந்நாளோ?