துய்ய கரமலரால் சொல்லாமல் சொன்னவுண்மை | ஐயனைக்கல் லால்அரசை யாமணைவ தெந்நாளோ. |
(பொ - ள்) தூய அறிவடையாளக்கை எனப்படும் சின்முத்திரைக் கையாற் சொல்லாமற் சொல்லியருளிக் காட்டிய உண்மையான தென்முகக் கடவுளே மறைவடிவாகிய கல்லால மரத்தடியில் வீற்றிருந்தருளிய வேந்தனை யாமணைவது எந்நாளோ? சொல்லாமற் சொல்லுதல் : வாயாற் சொல்லாது கையடையாளத்தாற் காட்டுதல்.
(1)
சிந்தையினுக் கெட்டாத சிற்சுகத்தைக் காட்டவல்ல | நந்தியடிக் கீழ்க்குடியாய் நாமணைவ தெந்நாளோ. |
(பொ - ள்) சிந்தையால் நாடவும் முடியாத சிவபெருமான் திருவடியை அணையத்தக்க அறிவுப் பேரின்பத்தினைக் காட்டிக் கூட்டி வைக்கக்கூடிய நந்திபெருமான் திருவடியின்கீழ் அடிக்குடியாக நாமணைவது எந்நாளோ?
(2)
எந்தை சனற்குமர னாதிஎமை ஆட்கொள்வான் | வந்த தவத்தினரை வாழ்த்துநாள் எந்நாளோ. |
(பொ - ள்) எமக்குத் தந்தையாகிய சனற்குமாரர் (மெய்கண்டார் பரஞ்சோதியார்) முதலிய அடியேமை ஆட்கொண்டருளும் பொருட்டு வந்தருளிய நன்னெறி நற்றவத்தோரை, நாம் வாயார வாழ்த்துநாள் எந்நாளோ?
(3)
பொய்கண்டார் காணாப் புனிதமெனும் அத்துவித | மெய்கண்ட நாதன்அருள் மேவுநாள் எந்நாளோ. |
(பொ - ள்) புன்னெறியாம் பொய்ச்சமயம் கூறியவற்றை உண்மையென மயங்கி உழலும் முக்கூற்றுப் புறச்சமயத்தாரும் காணமுடியாத அடைமுதலியன சேர்க்கப்படாத தூய அத்துவிதத்தை மொழிந்தருளிய மெய்கண்ட நாதனருன் பொருந்துநாள் எந்நாளோ?
(வி - ம்.) மாயாவாத மதத்தர் பரப்பிரமம் ஒன்றே யுள்ளது, அதற்கு வேறாக உயிரும் உலகமும் உண்டென்பதில்லை. காணப்படுவது போற்றோன்றுவது கனவுபோற் கற்பனையே எனக் கூறி அத்துவிதம் அறைவர். அதனால் அவர்கள் கூறும் அத்துவிதம் கேவலாத்துவிதம் எனப்படும். வைணவர் மாயோனாகிய கடவுளுமுண்டு, உலகம் உயிர்கள் எல்லாம் அவனுடைய திரிபே என்பர். கடவுள் உலகுயிர்களால் சிறப்பிக்கப்படுகின்றனன் என்பர். அதனால் அவர்கள் கூறும் அத்துவிதம் விசிட்டாத்துவிதம் என்பர். இவ்விரண்டும் அத்துவிதமென்னுஞ் சொல்லுக்குரிய பொருளாகா. மெய்கண்டார் கூறும் முப்பொருளுண்மையே மெய்ம்மையாம். அதனால் அவரருளும் அத்துவிதம் கலப்பாகிய அடையின்மை என்னும் பொருளில் புனிதாத்துவிதம் எனப் புகலப்படும். அஃதாவது ஒன்றாய் வேறாய் உடனாய்ப் புணரும் மெய்ப்புணர்ப்பு. அன்பின் கலப்பால் ஒன்றாய், அறிவின் சிறப்பால் வேறாய் ஆற்றலின் (தொழிலின்) துணையால் உடனாய்ச் சிவபெருமானும்