பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

618
போதவூர் நாடறியப் புத்தர்தமை வாதில்வென்ற
வாதவூர் ஐயன் அன்பை வாஞ்சிப்ப தெந்நாளோ.
    (பொ - ள்.) அனைத்துலகத்தோரும், தில்லையின்கண் திருச்சிற்றம்பலம் திகழ்ந்து கொண்டிருப்பதால் அதனை மெய்யுணர்வுத் திருவூர் என்று மிக்க காதலுடன் மொழிவர். அவ்வுண்மை நிலைபெற ஈழநாட்டினின்றும் போந்த புறப்புறச் சமயம் ஆறனுள் ஒன்றாகிய புத்தனைத் திருவருளால் சொல் வழக்கில்1 வென்று வெற்றி நாட்டியருளிய திருவாதவூரராகிய "மணிவாசகர்" திருவடிக்குரிய அன்பைக் காதலித்தொழுகுவ தெந்நாளோ?

    (வி - ம்.) சொல் வழக்கு - வாது, நன்னெறி நாற்படியினையும் நாயனருளால் நாம் கைக்கொண்டொழுகி யுய்ய நடித்துக் காட்டியருளிய முதல்வர் நால்வராவர். அவர் முறையே, நாவுக்கரசர், ஞானசம்பந்தர், நம்பியாரூரர், மணிவாசகர் எனப்படுவர். இந் நால்வர் திருப்பெயர்களும் சிவன் திருப்பெயர் போன்று திருவைந்தெழுத்தாலமைந்தமையால் இவை நாம மந்திர 2 மெனப்படும். நாற்படி : சீலம், நோன்பு, செறிவு, அறிவு எனப்படும்.

(4)
ஒட்டுடன்பற் றின்றி உலகைத் துறந்தசெல்வப்
பட்டினத்தார் பத்ரகிரி பண்புணர்வ தெந்நாளோ.
    (பொ - ள்.) உலகியலுறவும் யான் எனதென்னும் அகப்புறப் பற்றுக்களும் ஒரு சிறிதுமின்றி உலகினை முற்றத்துறந்த சிவனருட் செல்வம் கைவந்த நற்றவத்தோராம் பட்டினத்துப் பிள்ளையாரும், அவர் தம் மாணவராம் பத்திரகிரியாருமாகிய இருபெரும் மெய்யடியார்கள் தம் திருவருட் பண்பினைத் திருவருளால் உணர்வ தெந்நாளோ?

(5)
கண்டதுபொய் என்றகண்டா காரசிவம் மெய்யெனவே
விண்டசிவ வாக்கியர்தாள் மேவுநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) கண்ணாற்கண்டு சுட்டி யுணரப்படும் மாயாகாரிய உலகமும் உலகியற் பொருள்களும் நிலையில்லாதன என்றருளாலுணர்ந்து, யாண்டும் நீக்கமற நிறைந்து பிரிப்பின்றி நின்றருளும் சிவபெருமான் ஒருவனே தோற்ற நிலை யிறுதியாகிய மாறுதல் எய்தாதவன் என உலகமுய்யத் திருவாய் மலர்ந்தருளிய சிவவாக்கியர் திருவடியினைப் பொருந்தும் நாள் எந்நாளோ?

(6)
சக்கர வர்த்தி தவராச யோகியெனும்
மிக்கதிரு மூலன்அருள் மேவுநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) நற்றவமும், நல்ல சிவன் அகக்கூடல் என்னும் சிவராச யோகமும் திருவருளால் கைவரப் பெற்றுச் செந்நெறிச் செல்வவேந்தரெனும் நம்பிரான் திருமூலர் தம் திருவருளைப் பொருந்துநாளெந்நாளோ?

 1. 
'பூசுவதும்', 8. திருச்சாழல், 1.
 2.  
'மீனவன்', 12. சம்பந்தர், 121.