பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

617
வைதிகமாஞ் சைவ மவுனிமவு னத்தளித்த
மெய்திகழ்ந்தென் அல்லல் விடியுநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) மறைமுறை நெறி எனப்படும் வைதிக சைவ நெறியுடைய மவுனகுரு மவுன நிலையினின்று உணர்த்தியருளிய மெய்ப்பொருள் விளங்கித் துன்பம் அடியேனுக்கு ஒழியுநாள் எந்நாளோ?

(12)
வாக்குமன மற்ற மவுனிமவு னத்தருளே
தாக்கவும்என் அல்லலெல்லாந் தட்டழிவ தெந்நாளோ.
    (பொ - ள்.) உலகியல் வழியாகச் செல்லும் சொல்லும் ஐம்பொறி வழியாக மனமும் ஒடுங்கிய மவுனகுரு மோன நிலையினின்றருளிய திருவருளொன்றே அடியேனிடத்தில் அழுந்தப் பதிந்ததும் அடியேன் துன்பங்களனைத்தும் விலகும்; அத்தகைய நன்னாள் வருவதெந்நாளோ?

(13)
 
வெம்பந்தந் தீர்த்துலகாள் வேந்தன் திருஞான
சம்பந் தனையருளாற் சாருநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) கொடிய பிறவிக் கட்டினைத் திருவருளால் தீர்த்தருளி உலகத்துயிர்களை ஆட்கொண்டு திருவடிப் பேற்றின்கண் செலுத்தும் "ஞானசம்பந்தர் 1 "என்னும் திருவருள் வேந்தர் திருவடிகளை அருளால் அடியேன் சாருநா ளெந்நாளோ.

(1)
ஏரின் சிவபோகம் இங்கிவற்கே என்னஉழ
வாரங்கொள் செங்கையர்தாள் வாரம்வைப்ப தெந்நாளே.
    (பொ - ள்.) திருவருளாகிய, பேரழகினை வாய்ந்த சிவன்நுகர்வு இனி இவர்க்கே என்று உலகம் பாராட்டும்படி திருக்கையில் உழவாரப் படை 2 ஏந்தியருளிய "நாவுக்கரசர்" திருவடிக்குப் பேரன்பு பூண்டு ஒழுகும் நாள் எந்நாளோ?

(2)
பித்தரிறை என்றறிந்து பேதைபால் தூதனுப்பு
வித்த தமிழச்சமர்த்தர் மெய்புகழ்வ தெந்நாளோ.
    (பொ - ள்.) சிவனடியார்பால் பேரன்பு பூண்டொழுகும் பித்தர் சிவபெருமானென்று உள்ளத்துணர்ந்து, பரவை நாய்ச்சியாரிடத்துத் தூதராக 3 அனுப்பு வைத்தருளிய தனித்தமிழின்கண் மிக்க திறல் வாய்ந்த "நம்பியாரூரர்" பொருள்சேர் புகழினை எடுத்து மொழிந்தின்புறுவ தெந்நாளோ? பித்து - பேரன்பு; மிக்க ஈடுபாடு.

(3)
 1.  
'ஞானத்தின்'. 12. சம்பந்தர், 728.
 2.  
'மையற்றுறை'. 12. நாவுக்கரசர், 77.
 3.  
'துனிவளர்'. 12. ஏயர்கோன், 366.