பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

616
ஆட்கொள்ள எழுந்தருளி வந்த திருக்கோலங்கட்குப் பேரன்பு வைத்து ஒழுகுவது எந்நாளோ?

     (வி - ம்.) நன்னெறி - பொது நெறி; சன்மார்க்கம். கோலம் - செம்பொருட்டுணிவின் இயற்கைச் சீர்ப்புணர்ப்பு சுத்தாத்துவிதம் எனக் கூறப்படும். இப் புணர்ப்பு மெய்ம்மையினை உலகின்கண் வழிவழியாக நிலைநாட்டி வருவது மெய்கண்ட மரபு என்ப. மரபு - சந்தானம். கோலம் - திருக்கோலம். அஃது ஐந்தெழுத்தும் வெண்ணீறும் அன்படையாளமாம் சிவமணியு மென்ப. சிவமணி - உருத்திராக்கம்; கண்டி. ஆளவந்த - அடிமை கொள்ளவந்த.

(8)
என்னறிவை உள்ளடக்கி என்போல் வருமவுனி
தன்னறிவுக் குள்ளேநான் சாருநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) அடியேனுடைய அறிவை ஐம்பொறி வழியாகச் சென்று உலகப் பொருள்களாகிய புலன்களில் பற்றாமல் என்னுள்ளே அடங்கியிருக்குமாறு செய்தருளி, எளியேனை ஆட்கொண்டருளும் பொருட்டு எளியேன் போன்று மவுன குருவாய் எழுந்தருளிவந்து ஆட்கொண்டருளிய அம் மவுன குருவின் பெருநிறைவாம் வியாபகத்தினுள் அடங்கும் நிறைவாம் வியாப்பியமாகச் சாருநாள் எந்நாளோ?

     (வி - ம்.) மவுனிதன் அறிவுக்குள்ளே; மவுனகுருவின் பெருநிறைவுக்குள்ளே, நான் சாருநாள்; அடியேன் அடங்கு நிறைவாய்ச் சாருநாள்

(9)
ஆறுளொன்றை நாடின்அதற் காறுமுண்டோ மென்றெமக்குக்
கூறும் மவுனியருள் கூடுநாள் எந்நாளோ.
     (பொ - ள்.) அறுவகைப்பட்ட அகச் சமயங்களுள் ஒன்றை வினைக்கேற்றபடி ஒருவர் சார்ந் தொழுகின், அதற்கேற்ற ஆறாகிய பயனும் உண்டாகும் என்று அடியேனுக்குத் திருவாய் மலர்ந்தருளிய மவுன குருவின் திருவருளைச் சேருநாள் எந்நாளோ?

     (வி - ம்.) ஆறு :பயன். ஆறுமுண்டென்பது, பயனுமுண்டென்பதாம். இவ்வுண்மை வருமாறு :

"அறத்தா றிதுலென வேண்டா சிவிகை
 பொறுத்தானோ டுர்ந்தா னிடை."
- திருக்குறள்; 27.
அறத்தாறு - அறத்தின் பயன்.

(10)
நில்லாமல் நின்றருளை நேரேபா ரென்றவொரு
சொல்லால் மவுனியருள் தோற்றுநாள் எந்நாளோ.
     (பொ - ள்.) தன்முனைப்பாம் சிற்றறிவை முன்னிட்டு நில்லாமல் அருள்முனைப்பாம் அறிவு வண்ணமாக நின்று அத் திருவருளைக் குறிக்கொண்டு நோக்குவாயாக வென்று செம்பொருட்டுணிவின் ஒருமொழியாம் சிவ என்னும் தனித்தமிழ் மந்திரத்தால் மௌன குருவின் திருவருள் தோன்றுநாள் எந்நாளோ? குறிக்கொண்டு நோக்குதல் - நேரே பார்த்தல்.

(11)