பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

622
வலையினை வைப்பவர்களாகிய மையல் மாதர்களுடைய மாயச் சூழ்ச்சிகளைக் கடந்து நீங்குநாள் எந்நாளோ?

(2)
கண்டுமொழி பேசிமனங் கண்டுகொண்டு கைவிலையாக்
கொண்டுவிடு மானார்பொய்க் கூத்தொழிவ தெந்நாளோ.
    (பொ - ள்.) கற்கண்டு போன்று இனிக்கும்படியான சொற்களைச் சொல்லி விடலைகளினுடைய உள்ளக் கருத்தினைத் தெரிந்து கொண்டு அடிமைகளாகக் கொண்டுவிடும், மான்போலும் விழியினையுடைய மையல் மாதர்தம் நடிப்பினைவிட்டு அகல்வ தெந்நாளோ? விடலை - காளை. ஈண்டுக் கற்பு நிறையில்லாக் காமுகன்.

(3)
காமனைவா வென்றிருண்ட கண்வலையை வீசும்மின்னார்
நாமம் மறந்தருளை நண்ணுநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) காமனை யொத்த கற்புநிறை இல்லாத கழிகாமத்தானை வருவாயாக வென்று மைதீட்டிய கண் வலையை வீசி மயக்கும் மையல் மாதர்தம் பெயரும் மறந்து நின் திருவருளை அடையுநாள் எந்நாளோ?

(4)
கண்களில்வெண் பீளை கரப்பக் கருமையிட்ட
பெண்கள்மயல் தப்பிப் பிழைக்குநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) கண்களில் வடிகின்ற வெண்மையான பீளையென்னும் அழுக்குமறையக் கருமையான மை யெழுதியுள்ள மையல் மாதர்தம் மயக்கிற்குத் தப்பிப் பிழைக்கு நாளெந்நாளோ?

(5)
வீங்கித் தளர்ந்து விழுமுலையார் மேல்வீழ்ந்து
தூங்குமதன் சோம்பைத் துடைக்குநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) பெருத்துச் சில காலம் அவ்வாறே இருந்து (இறும் பூது சான்றமுலையுங் காணாய், வெறும்பை போல வீழ்ந்து வேறாயின என்று சொல்லும்படி) பின் தளர்ந்து தொங்கு மார்பினையுடைய மையல் மாதர்மேல் வீழ்ந்துறங்கும் காமத்தொடர்பான சோம்பலினை யொழிக்குநா ளெந்நாளோ? மதன் - காமன்; காமத்தொடர்பு.

(6)
கச்சிருக்குங் கொங்கை கரும்பிருக்கும் இன்மாற்றம்
வைச்சிருக்கும் மாதர் மயக்கொழிவ தெந்நாளோ.
    (பொ - ள்.) கச்சினிற் கட்டுப்பட்டு விம்மி நிற்கும் மார்பினையும் கரும்பு போன்று இனிக்கும் இனிய சொல்லினையும் தன்பாற் கொண்டு மயக்கும் மையல் மாதர்தம் மயக்கொழிவ தெந்நாளோ? கச்சு - இரவிக்கை. இன்மாற்றம் - இனியசொல்.

(7)
பச்சென்ற கொங்கைப் பரப்பியர்பா ழானமயல்
நச்சென் றறிந்தருளை நண்ணுநாள் எந்நாளோ.