பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

623
    (பொ - ள்.) மங்கைப் பருவத்தில் பசுமை படர்ந்திருக்கும் கொங்கைகளால் காமுகரைப் பசப்பித் திரியும் மையல் மாதர்தம் பாழான மயக்கம், உணர்வினை யழித்து உடலுக்கும் ஊறு செய்யும் கொடிய நஞ்சு என்று உண்மையானுணர்ந்து திருவருளை வந்து சாருநாள் எந்நாளோ?

(8)
உந்திச் சுழியால் உளத்தைச் சுழித்தகன
தந்தித் தனத்தார் தமைமறப்ப தெந்நாளோ.
    (பொ - ள்.) மையல்செய் மாதர் கொப்பூழாகிய நீர்ச்சுழியினால் காமுகர் மனத்தினைச் சுழித்து அழுத்தும்; யானையின் தலையெனப்படும் மத்தகம் போன்று காணப்படும் மார்பினையுடைய மையல் மாதர் தங்களை மறந்து விடுவது எந்நாளோ?

(9)
தட்டுவைத்த சேலைக் கொய்சகத்திற் சிந்தைஎல்லாங்
கட்டிவைக்கும் மாயமின்னார் கட்டழிவ தெந்நாளோ.
    (பொ - ள்.) தட்டுத்தட்டாக மடித்துச் சிலையைக் கொய்சகமாக்கிக் கட்டிக்கொள்ளும் மையல் மாதர்தம் கொய்சகத்துள் காமுகர் நெஞ்சங்களையெல்லாம் கட்டிவைக்கும் மாயம்வல்ல மாதர்தம் கட்டழிவது எந்நாளோ?

(10)
ஆழாழி என்ன அளவுபடா வஞ்சநெஞ்சப்
பாழான மாதர்மயல் பற்றொழிவ தெந்நாளோ.
    (பொ - ள்.) ஆழமாகிய பெரியகடல் என்று சொல்லுதற்குரிய எல்லையில்லாத வஞ்ச நெஞ்சத்தை யுடைய பயனில்லாத மையல் மாதர்தம் பற்றற்று ஒழிவது எந்நாளோ?

(11)
தூயபனித் திங்கள் சுடுவதெனப் பித்தேற்றும்
மாய மடவார் மயக்கொழிவ தெந்நாளோ.
    (பொ - ள்.) தூய குளிர்ச்சியினைத் தருந் திங்கள் மண்டிலமும் மிக்க சூட்டினைத் தந்து வருத்துவதாகக் கூறிக் காமுகரைப் பிடித்துக் கொள்ளச் செய்யும் மாயமாதர்தம் மயக்கொழிவது எந்நாளோ?

(12)
ஏழைக் குறும்புசெய்யும் ஏந்திழையார் மோகமெனும்
பாழைக் கடந்து பயிராவ தெந்நாளோ.
    (பொ - ள்.) இல்லாத வறுமையை உள்ளது போலக் காட்டிக் காமுகரை மயக்கிக் குறும்புகள் செய்யும் அணிகலங்கள் அணிந்து கொண்டுள்ள மையல் மாதர்மேல் கொள்ளும் பெருவேட்கை யென்னும் பாழைக் கடந்து திருவருளாகிய பெருவெளி நிலத்தில் சென்று பயிராவ தெந்நாளோ?

(13)
விண்டு மொழிகுளறி வேட்கைமது மொண்டுதருந்
தொண்டியர்கள் கட்கடையிற் சுற்றொழிவ தெந்நாளோ.