பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

624
    (பொ - ள்.) வாய்திறந்து சொல்லுஞ்சொல் குழறிக் காமுகர் தம்பால் வைக்கும் வேட்கை யென்னும் கள்ளினை மொண்டு அக்காமுகருக்குக் கொடுத்து மயக்கத்திலாழ்த்தும் விலைமாதர்களுடைய கடைக் கண்ணிற் சிக்குண்டு அவர்களைச் சுற்றித்திரியும் கீழ்மையொழிதல் எந்நாளோ?

(14)
மெய்யிற் சிவம்பிறக்க மேவும்இன்பம் போல்மாதர்
பொய்யிலின் பின்றென்று பொருந்தாநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) மறைப்பாற்றலால் மறைந்திருந்த சிவன் வனப்பாற்றலால் உடம்பின்கண் வெளிப்பட்டருளியபோது மிக்கோங்கித் தோன்றும் நிலையான திருவருளின்பம் போன்று, மையல் மாதர் உடம்பின்கண் சிறிய இன்பமும் இன்று, என்றுணர்ந்து அதில் ஆசை கொள்ளாமல் இருக்கும்நாள் எந்நாளோ? மறைப்பாற்றல் - திரோதானசத்தி, வனப்பாற்றல் - பராசத்தி.

(15)
ஐம்பூதத் தாலே அலக்கழிந்த தோடமற
எம்பூத நாதனருள் எய்துநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) நிலம், நீர், நெருப்பு, காற்று வானம் ஆகிய ஐம்பெரும் பூதத்தால், ஆகிய இவ்வுடம்பினுள் இருவகை வினைக்கீடாகச் சிவபெருமான் திருவாணைவழிப் புகுந்து துன்புற்று அலைந்து திரிந்ததெல்லாம் போதும்! விருப்பமிக்க பூதகணங்களுக்குத் தலைவராகவுள்ள சிவபெருமானின் திருவடியை எய்து நாள் எந்நாளோ? பிருதுவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்பன ஐம்பூதங்கள்.

(1)
சத்தமுத லாம்புலனிற் சஞ்சரித்த கள்வரெனும்
பித்தர்பயந் தீர்ந்து பிழைக்குநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் என்று சொல்லப்படும் புலன்கள் ஐந்தினுக்குரிய புலன் கொளியாகிய பொறிகளும் ஐந்தெனப்படும். அவை முறையே செவி, மெய், கண், வாய், மூக்கு எனச் சொல்லப்படும். இப் பொறிகள் ஆருயிர்களை வஞ்சித்து இழுத்துச் செல்லும் தன்மைய. அதனால் அவை கள்வரென்றழைக்கப்படும். அக் கள்வராகிய பித்தரால் ஏற்படும் துன்ப அச்சங்கள் தீர்ந்து நின்ளருளால் பிழைக்கும் நாள் எந்நாளோ? ஒசை - சத்தம், ஊறு - பரிசம். ஒளி - உருவம். சுவை - இரசம். நாற்றம் - கந்தம்

(2)
நாளும் பொறிவழியை நாடாத வண்ணம்எமை
ஆளும் பொறியால் அருள்வருவ தெந்நாளோ.
    (பொ - ள்.) எந்நாளும் அல்லலுறத்தும் ஐம்பொறி வழியை நாடாதவண்ணம், எம்மை யாட்கொண்டருளும் முதறிவாளரால் திருவருள் வருவது எந்நாளோ?

(3)