(பொ - ள்.) அறியாமைக்குத் துணைநிற்கும் இவ்வுலகத்து நுகர் பொருளைக் கண்டு அவற்றுக்கு காவலாக விழித்திருந்த துன்பங்கள் நீங்கித் திருவருள் இன்பின் நீங்காது தங்குநாள் எந்நாளோ?
(12)
வெய்ய பிறவிவெயில் வெப்பமெல்லாம் விட்டகல | ஐயனடி நீழல் அணையுநாள் எந்நாளோ. |
(பொ - ள்.) கொடிய பிறவியெனும் கடிய வெயில் வெப்பம் அனைத்தும் விட்டு நீங்கும்படி சிவபெருமானின் திருவடி நிழலைச் சேருநாள் எந்நாளோ?
(13)
வாதைப் பிறவி வளைகடலை நீந்தஐயன் | பாதப் புணைஇணையைப் பற்றுநாள் எந்நாளோ. |
(பொ - ள்.) துன்பத்திற் கேதுவாயுள்ள பிறப்பென்னும் சூழ்ந்த பெருங்கடலை நீந்திக் கரையேறச் சிவபெருமானின் திருவடிப் பெரும் புணையைத் திருவருளால் பற்றுநாள் எந்நாளோ?
(14)
ஈனமில்லா மெய்பொருளை இம்மையிலே காணவெளி | ஞானமெனும் அஞ்சனத்தை நான்பெறுவ தெந்நாளோ. |
(பொ - ள்.) சிறிதும் மலப்பிணிப்பில்லாத மெய்ப்பொருளாம் சிவபெருமானை இப் பிறப்பிலே திருவருளால் கண்டு வழிபட வெளிப்படையாக மூதறி வெனப்படும் சிவஞான மையினை அடியேன் பெறுவது எந்நாளோ? அஞ்சனம் - மை.
(15)
எல்லாம் இறந்தவிடத் தெந்தைநிறை வாம்வடிவைப் | புல்லாமற் புல்லிப் புணருநாள் எந்நாளோ. |
(பொ - ள்.) தத்துவம் முப்பத்தாறும் கடந்து இடத்து விளக்கமுறும் எந்தையாகிய சிவபெருமானின் நிறைந்த பெரும் பரப்பாம் வியாபகத்தினை தன்முனைப்பறிவால் தழுவாமல் திருவருள் முனைப்புணர்வால் தழுவிப் புணருநாள் எந்நாளோ?
(16)
சடத்துளுயிர் போலெமக்குத் தானுயிராய் ஞானம் | நடந்துமுறை கண்டுபணி நாம்விடுவ தெந்நாளோ. |
(பொ - ள்.) அறிவில்லாத உடம்புடன் சிற்றறிவுடைய உயிர் இயைந்து இயக்குந் தன்மைபோல், அடியேங்களுடைய உயிர்க்குயிராய் அகம்புறமாய் நிறைந்து சிவபெருமான் இயக்கித் தன் திருவடியுணர்வைத் துய்க்கச் செய்யுந் தன்மையினைத் திருவருளாலுணர்ந்து எளியேங்களுடைய முனைப்புச்செயல்களை விட்டொழிவது எந்நாளோ?
(17)
எக்கணுமாந் துன்ப இருட்கடலை விட்டருளால் | மிக்ககரை ஏறி வெளிப்படுவ தெந்நாளோ. |
(பொ - ள்.) எவ்விடத்திலும் சூழ்ந்துகொண்டிருக்கும் துண்பமாகிய பெரிய இருட் கடலைத் திருவருளால் நீங்கி அத் திருவருளாகிய