காட்டுந் திருவருளே கண்ணாகக் கண்டுபர | வீட்டின்ப மெய்ப்பொருளை மேவுநாள் எந்நாளோ. |
(பொ - ள்.) மெய்ப்பொருளை உண்மையாகக் காட்டியருளும் வனப்பாற்றலாகிய திருவருளினையே கண்ணாகக் கொண்டு நல்ல சிவபெருமானாகிய திருவடிப் பேற்றின்ப மெய்ப்பொருளைப் பொருந்துநாளெந்நாளோ?
(6)
நானான தன்மை நழுவியே எவ்வுயிர்க்குந் | தானான உண்மைதனைச் சாருநாள் எந்நாளோ. |
(பொ - ள்.) ஆணவ முனைப்பினால் நானெனச் செருக்குற்று எழும் தன்மை திருவருள் நாட்டத்தால் எனக்குத் தெரியாமல் என்னை விட்டுக்கழிய, எல்லா வுயிர்கட்கும் (எல்லா வுலகங்கட்கும்) தன்திருவருள் வெளியே நிலைக்களமாகவுள்ள மெய்ப்பொருளாம் சிவபெருமானைச் சாருநாள் எந்நாளோ?
(7)
சிந்தை மறந்து திருவருளாய் நிற்பவர்பால் | வந்தபொருள் எம்மையுந்தான் வாழ்விப்ப தெந்நாளோ. |
(பொ - ள்.) தன்முனைப்பற்றுத் தன்னுணர்வு நீங்கித் திருவருள் வயமாய் உறைத்து நிற்பவர்பால் மிக்கோங்கி வந்தருளும் பெரும் பொருளாகிய சிவம் எளியேமையும் வாழ்வித்தருளுநாள் எந்நாளோ?
(8)
எள்ளுக்குள் என்ணெய்போல் எங்கும் வியாபகமாய் | உள்ளஒன்றை உள்ளபடி ஓருநாள் எந்நாளோ. |
(பொ - ள்.) எள்ளினுக்குள் 1 எண்ணெய் உள்ளும் வெளியுமாய் எங்கணும் நீக்கமற நிறைந்திருப்பது போன்று உலகுயிர்கள் எல்லாவற்றினும் நீக்கமறப் பெருநிறைவாய் நிறைந்து நிற்கும் உள்ள ஒன்றாம் சிவபெருமான் திருவடியினை உள்ளபடி சாருநாள் எந்நாளோ?
(9)
அருவுருவம் எல்லாம் அகன்றதுவா யான | பொருளெமக்கு வந்து புலப்படுவ தெந்நாளோ. |
(பொ - ள்.) பொருள்கள் எல்லாம் கட்புலனாகா நுண்மை நிலையில் அருவமாகவும், கட்புலனாய், உறுப்பு விளங்காப் பிழம்புநிலையில் அருவுருவமாகவும், உறுப்பு விளங்குநிலையில் உருவமாகவும் காணப்படும். சிவபெருமான் இம் முத்திற நிலைகளையும் கடந்த முழுமுதல்வன். தானாக நிற்கும் பெரும்பொருள். அது திருவருளால் எளியேமுக்கு வந்து புலப்படுநாள் எந்நாளோ?
(10)
ஆரணமுங் காணா அகண்டிதா காரபரி | பூரணம்வந் தெம்மைப் பொருந்துநாள் எந்நாளோ. |
1. | 'கொள்ளுங்' 8. திருச்சதகம், 46. |