பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

637
    (பொ - ள்.) ஆரண 1 மாகிய வேதங்களாலும் காண்டற்கரிய எல்லையில்லாத பெருவடிவான எங்கும் நிறைந்த சிவபெருமான் எழுந்தருளிவந்து எளியேனைப் பொருந்துநாள் எந்நாளோ?

(11)
சத்தொடுசித் தாகித் தயங்கியஆ னந்தபரி
சுத்த அகண்டசிவந் தோன்றுநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) தோற்ற நிலை இறுதி நீங்கி என்றும் ஒன்றுபோல் உள்ளதாய்த் தானே விளங்கும் பேரறிவுடையதாய்த் திகழும் பேரின்பத் தூய எல்லையில்லாத சிவபெருமான் வெளிப்பட்டருளும் நாள் எந்நாளோ?

(12)
எங்கெங்கும் பார்த்தாலும் இன்புருவாய் நீக்கமின்றித்
தங்குந் தனிப்பொருளைச் சாருநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) திருவருளை முன்னிட்டுக்கொண்டு எவ்விடங்களிற் பார்த்தாலும், பேரின்பப் பெருவடிவாய் நீக்கமின்றித் தங்கியருளும் ஒப்பில்லாத மெய்ப்பொருளாம் சிவபெருமானைச் சாருநாள் எந்நாளோ?

(13)
அடிமுடிகாட் டாதசுத்த அம்பரமாஞ் சோதிக்
கடுவெளிவந் தென்னைக் கலக்குநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) தோற்றமும் ஈறும் இல்லாத தூய திருச்சிற்றம்பலமாம் அறிவுப் பேரொளியென்னும் திருவருட் பெருவெளி வந்து அடியேனைக் கலந்தருளு நாள் எந்நாளோ?

(14)
ஒன்றனையுங் காட்டா உளத்திருளைச் சூறையிட்டு
நின்றபரஞ் சோதியுடன் நிற்குநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) உலகியற் பொருள்கள் ஒன்றனையும் உள்ளவாறு காட்டாது திரியக் காட்டும் உள்ளத்துப் பொருந்திய ஆணவ வல்லிருளை நீக்கி நின்றருளிய நின்திருவருட் பேரொளியுடன் இரண்டறக் கலந்துநிற்கு நாள் எந்நாளோ?

(15)
எந்தச் சமயம் இசைந்தும்அறி வூடறிவாய்
வந்தபொரு ளேபொருளா வாஞ்சிப்ப தெந்நாளோ.
    (பொ - ள்.) (பள்ளி வகுப்புப் போலவும் பிள்ளை வளர்ச்சி போலவும் உலகிடைக் காணப்படும் பல்வேறு சமயங்களும் அவ்வவர் அறிவுநிலைக்கேற்ப நிகழ்வன. எனவே,) அவ்வச் சமயங்களிலும் அவ்வவர்க் கருள்புரியும் பொருட்டு இசைந்தருளி அவ்வவர்தம் அறிவிற் கறிவாய் வந்தருளும் பொருள் சிவபெருமானே எனத் திருவருளால் தெளிந்து பேரன்பு வைப்பது எந்நாளோ?

(16)
 1. 
'ஆரண'. சிவஞான சித்தியார், 1. 2 - 18.