(17)
தந்திரத்தை மந்திரத்தைச் சாரின்நவை யாம் அறிவென் றெந்தையுணர் வேவடிவாய் எய்துநாள் எந்நாளோ.
(பொ - ள்.) (உலகியல் முறையான தந்திர மந்திரங்களை ஒருவன் பயிலின் அஃது அவனுக்கு யான் எனதென்னும் செருக்கை யுண்டாக்கும். அம்முறையில்) தந்திர மந்திரங்களைச் சாரின் அறிவினில் குற்ற முண்டாகும் என்று எம் தந்தையாகிய சிவபெருமானின் பேரறிவே அடியேன் உருவாக எய்து நாள் எந்நாளோ?
(18)
போக்குவர வற்றவெளி போல்நிறைந்த போதநிலை நீக்கமறக் கூடி நினைப்பறுவ தெந்நாளோ.
(பொ - ள்.) போக்குவரவின்றி ஒருபடித்தாய் இடங்கொடுத்து நிற்கும் வெளியாகிய ஆகாயத்தைப் போன்று, நிறைந்த மூதறிவு நிலையில் இரண்டறக் கலந்து திருவடி நினைவன்றி வேறு நினைவின்றி யிருக்குநாள் எந்நாளோ?
(19)
காண்பானுங் காட்டுவதுங் காட்சியுமாய் நின்றஅந்த வீண்பாவம் போய்அதுவாய் மேவுநாள் எந்நாளோ.
(பொ - ள்.) காண்பானாகிய2 ஆருயிரும் காட்டுவானாகிய சிவனும் காட்சியாகிய உயிரறிவும் வேறுவேறாக நின்று செயல்படும் என்று எண்ணுகின்ற அவ் வீண் எண்ணம் எந்நாளில் போகும்? காண்பான் காட்சி காட்சிப்பொருள் என்று சொல்லுகின்ற மூவகையும் ஒன்றுபட்டு அக் காட்சிப் பொருளாகிய சிவமொன்றனையே துய்த்துக்கொண்டிருக்குநாள் எந்நாளோ?
(20)
வாடாதே நானாவாய் மாயாதே எங்கோவை நாடாதே நாடி நலம்பெறுவ தெந்நாளோ.
(பொ - ள்.) புறச் சமயங்களைச் சார்ந்து வாடாமலும், உலகியல் முறையில் பலவாகச் சென்று அறிவு மாயாமலும் எம்முதல்வராகிய சிவ பெருமானைத் தற்போத முனைப்பால் நாடாமலும், திருவருள் முனைப்பால் நாடி நலம்பெறுநாள் எந்நாளோ? காண்பான் - ஞாதுரு, காட்டுவது - ஞானம். காட்சிப் பொருள் - ஞேயம்.
(21)
1. | 'நசித்தொன்றின்,' சிவஞான போதம், 11. 2 - 3. |
2. | 'காண்பானுங்.' வினாவெண்பா, 11. |
3. | 'சிற்றிறவு.' வினாவெண்பா, 6. |