(வி - ம்.) புறவெளியின் ஒப்பால் திருவருள் வெளியின்கண் தடை ஏதுமின்றிச் சிவத்தைக்காணும் சீர்மை குறிக்கப்பட்டமை காண்க.
(26)
ஆண்டான் மவுனி அளித்தஅறி வாலறிவைத் | தூண்டாமல் தூண்டித் துலங்குநாள் எந்நாளோ. |
(பொ - ள்) அடியேனை ஆட்கொண்டருளிய மவுன குருவானவர் கொடுத்தருளிய மெய்யுணர்வினைக் கொண்டு பேரறிவாம் சிவபெருமானைத் தூண்டாமற்றூண்டி எளியேன் விளங்குநாள் எந்நாளோ?
(வி - ம்.) தூண்டாமற் றூண்டல் : ஆருயிர்கள் தன்முனைப் பறிவால் தூண்டாமல் திருவருளுணர்வால் தூண்டல், இவை கை விளக்கால் விண்காண்டலும், ஞாயிற்றினால் விண்காண்டலும் போன்றனவாகும்.
(27)
ஆணவத்தொ டத்துவித மானபடி மெய்ஞ்ஞானத் | தாணுவினோ டத்துவிதஞ் சாருநாள் எந்நாளோ. |
(பொ - ள்) ஆருயிர் தொன்மையில் தன்னைப்பற்றி யிருந்த ஆணவமே யாகாமலும் அவ்வாணவத்துக்கு வேறாகாமலும் அதனுள்ளடங்கி அதன் வழி நின்றமை போன்று, பேரறிவுப் பெருஞ்சார்பினுடன் திருவருளாற் கலந்து சார்பாம் சிவபெருமானும், ஆகாது வேறுமாகாது திருவடிக்கீழடங்கி அதன் வழி நின்று பேரின்பந் துய்ப்பதாகிய மெய்ப்புணர்ப் பெய்துநாள் எந்நாளோ?
(28)
கன்மநெறி தப்பிற் கடுநரகென் றெந்நாளும் | நன்மைதரு ஞானநெறி நானணைவ தெந்நாளோ. |
(பொ - ள்) மீண்டும் பிறவிக்கு ஏதுவாகிய வேள்வி முதலிய கன்மங்களைப் புரிவோர் சிறிது தவறினும் கடுநரகு எய்துவர் என்று அந்நூலோர் சொல்லுவர். அங்ஙனமன்றி எந்நாளும் நன்மையே தரக்கூடிய சரியை, கிரியை, யோகம். ஞானம் என்னும் நன்னெறி நாற்படியினை மேற்கொள்ளின் நன்மையே உண்டாகும். அதனால் அத்தகைய ஞான நெறியினை அடியேன் அணைவது எந்நாளோ?
(1)
ஞானநெறி தானே நழுவிடினும் முப்பதத்துள் | ஆனமுத்தி நல்குமென அன்புறுவ தெந்நாளோ. |
(பொ - ள்) சரியை முதலிய நான்கிற்கும் சாலோக முதலிய நான்கு நிலைகள் உள்ளன. அவற்றுள் ஞான நெறியினைக் கைக்கொண்டவர்கள் அந்நெறியினின்றும் சிறிது நழுவினும், அதற்கு முன்னுள்ள முந்நிலைகளில் ஒன்றினை யணைவர். அம்முறையில் அந்த ஞான நெறியின்கண் அன்புறுவ தெந்நாளோ.
(வி - ம்.) கன்மம்முதலிய வேள்வியினைப் புரிவோர் கழைமேல் நின்று கூத்தாடுங் கழைக்கூத்தரை யொப்பர்; அவர்கள் சிறிது