பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

660
துரியங் கடந்தஒன்றே தூவெளியாய் நின்ற
பெரியநிறை வேஉனைநான் பெற்றிடவுங் காண்பேனோ.
     (பொ - ள்) நாலாம் நிலையாகிய துரியங் கடந்து ஐந்தாம் நிலையாகிய துரியாதீதமுங் கடந்த ஒப்பில்லாத திருச்சிற்றம்பலம் எனப்படும் தூவெளியாய் நிறைந்து நின்றருளிய பெரிய முழுநிறைவே நின்திருவடியினை அடியேன் பெற்றிடவுங் காண்பேனோ?

(3)
 
மாசற்ற அன்பர்நெஞ்சே மாறாத பெட்டகமாத்
தேசுற்ற மாமணிநின் தேசினையுங் காண்பேனோ.
     (பொ - ள்) குற்றமில்லாத மெய்யன்பர் தம் தூய வுள்ளமே மாறுதலில்லாத பேழையாகக் கொண்டு மிக்க ஒளிபொருந்திய செம்மணியாக நின்று ஒளிர்கின்ற நின்பேரொளியினையும் அடியேன் காண்பேனோ?

(4)
 
மாயா விகார மலமகல எந்தைபிரான்
நேயானு பூதி நிலைபெறவுங் காண்பேனோ.
     (பொ - ள்) மாயாகாரியத் தொடர்பால் வேறுபாடு எய்தும் மனநிலை மாற எளியேங்களுடைய தந்தையாகிய நின் திருவடிக்கண் நீங்கா மெய்யன்பு கைவருநிலை நிலைத்திடவுங் காண்பேனோ?

(5)
 
பொய்யுலகும் பொய்யுறவும் பொய்யுடலும் பொய்யெனவே
மெய்யநினை மெய்யெனவே மெய்யுடனே காண்பேனோ.
     (பொ - ள்) நிலையில்லாத மாயாகாரிய உலகமும், அதுபோல் உடம்பின் தொடர்பாகிய உறவும், நிலையில்லாத இவ் உடலும் பொய்யென நின் திருவருளால் உணர்ந்து என்றும் ஒருபடித்தாக இருக்கும் மெய்யனே, உன்னைச் சிறப்புயிராகிய சீவன்முத்தர் நிலையினை அடைந்து நின் திருவடியைக் காண்பேனோ?

(6)
 
வாலற்ற பட்டமென மாயா மனப்படலங்
காலற்று வீழவும்முக் கண்ணுடையாய் காண்பேனோ.
     (பொ - ள்) தொங்கும் வாலற்ற காற்றாடி போன்று, மாயா காரியமாகிய உழலும் மனம் செயலற்றுக் கிடக்கவும் மூன்று திருக்கண்களையுடையாய் அடியேன் காண்பேனோ?

(7)
 
உள்ளும் புறம்பும் ஒருபடித்தாய் நின்றுசுகங்
கொள்ளும் படிக்கிறைநீ கூட்டிடவுங் காண்பேனோ.
     (பொ - ள்) உள்ளும் வெளியும் ஒருபடித்தாய் இருந்து நின்திருவடிப் பேரின்பத்தினைக் கொண்டு நுகரும்படி முதல்வனே நீ கூட்டியருளவுங் காண்பேனோ?

(8)
 
காட்டுகின்ற முக்கட் கரும்பே கனியேஎன்
ஆட்டமெல்லாந் தீரஉன தாடலையுங் காண்பேனோ.