பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

661
     (பொ - ள்) திருவருளினைக் காட்டி யருளுகின்ற மூன்று திருக்கண்களையுடைய கரும்பு போன்றவனே! காழி (விதை)லாக் கனி போன்றவனே, உலகவியல்பாக விளையும் எளியேனுடைய ஆட்டமெல்லாம் தீர்ந்து நீங்கும்படி உன் திருக்கூத்தினையுங் காண்பேனோ?

(9)
 
தூங்காமல் தூங்கிச் சுகப்பெருமான் நின்நிறைவில்
நீங்காமல் நிற்கும் நிலைபெறவுங் காண்பேனோ.
     (பொ - ள்) தன்னை மறந்து அறிவடங்கித் தூங்குகின்ற தூக்கம் தூங்காமல், அகத்தவமாம் சிவயோகத் திருந்து தன்னை மறந்து அறிவடங்காது முனைப்பு அடங்கி திருவடியின்கண் ஒடுங்கி அதனையே நுகர்ந்து நிற்கின்ற அறிதுயில்கொண்டு பேரின்பப் பெருவடிவப் பெருமானே நின் பெருநிறைவின்கண் நீங்காமல் நிற்கும் நிலை பெறவுங் காண்பேனோ?

(10)
 
வாதவூ ராளிதனை வான்கருணை யால்விழுங்கும்
போதவூ ரேறேநின் பொன்னடியுங் காண்பேனோ.
     (பொ - ள்) திருவருளால் திருவாதவூரின்கண் திருத்தோற்றம் பெற்றவராகிய மணிவாசகப் பெருமானை, நின் ஒப்பரிய பெருந்தண்ணளியால் நின்திருவடிக்கண் இரண்டறக் கலப்பித்தருளும் பேரறிவுப் பெருநாட்டின் பெருவேந்தே நின் பொன்போலுந் திருவடியையும் நின்திருவருளால் காண்பேனோ?

(11)
 
சாட்டைஇலாப் பம்பரம்போல் ஆடுஞ் சடசால
நாட்டமற எந்தைசுத்த ஞானவெளி காண்பேனோ.
     (பொ - ள்) கயிறு இல்லாமல் ஆடும் பம்பரத்தைப் போன்று ஆடும் இவ்வுடம்பு இவ்வுலகம் - ஆகியவற்றில் வைக்கும் எளியேனுடைய நாட்டம் செல்லாது நீங்க எந்தையே நின்னுடைய தூயஞான வெளியெனப்படும் திருச்சிற்றம்பலத்தினைக் காண்பேனோ?

(12)
 
மன்றாடும் வாழ்வே மரகதஞ்சேர் மாணிக்கக்
குன்றேநின் தாட்கீழ்க் குடிபெறவுங் காண்பேனோ.
     (பொ - ள்) தில்லைத் திருச்சிற்றம்பலமாகிய பொன்மன்றத்தின் கண்ணே ஐந்தொழில் அருட்கூத்தினை ஆடியருளுகின்ற மரகத நிறம் பொருந்திய அம்மையொடு சேர்ந்த செம்மணியாம் மாணிக்கமலையே நின்திருவடிக்கீழ் மீளா ஆளாய்க் குடியிருக்கவுங் காண்பேனோ?

(13)
 
பொய்யென் றறிந்தும்எமைப் போகவொட்டா தையஇந்த
வையங் கனமயக்க மாற்றிடவுங் காண்பேனோ.
     (பொ - ள்) இவ்வுலகமானது மாயா காரியமாகத் தோன்றி நின்று ஒடுங்கும் திரிபினையுடையதென்று நூலுணர்வாலும் நுண்ணுணர்வாலும் உணர்ந்தும் இவ்வுலகம் எம்மை நீங்கவொட்டாது மயக்கும். ஐயனே இம் மயக்கந் தீர்த்து மாற்றிடவுங் காண்பேனோ?

(14)