பஞ்சாய்ப் பறக்குநெஞ்சப் பாவியைநீ கூவிஐயா | அஞ்சாதே என்றின் னருள்செயவுங் காண்பேனோ. |
(பொ - ள்) பஞ்சினைப் போல் உலகில் சுற்றித் திரியும் பாவியாகிய எளியேனை முதல்வனே நீ கூவி அழைத்து ஐயா, அஞ்சாதே என்று நின் இனிய திருவருளைப் புரியவுங் காணப்பெறுவேனோ?
(21)
ஆடுகறங் காகி அலமந் துழன்றுமனம் | வாடுமெனை ஐயாநீ வாவெனவுங் காண்பேனோ. |
(பொ - ள்) வானத்தில் ஆடுங் காற்றாடியை ஒத்துச் சுழன்று உழன்றுகொண்டிருக்கும் தன்மையால் மனம்வாட்டம் எய்தி வருந்தும் எளியேனை, ஐயா நீ வாவென அழைத்தருளவுங் காணப்பெறுவேனோ?
(22)
சிட்டர்க் கெளிய சிவனேயோ தீவினையேன் | மட்டற்ற ஆசை மயக்கறவுங் காண்பேனோ. |
(பொ - ள்) மெய்யடியார் எனப்படும் சிட்டர்களுக்கு மிக எளியராகக் காணப்படும் சிவபெருமானே! தீவினையினை யுடைய யான் கொண்டுள்ள அளவில்லாத ஆசை மயக்கம் அற்றொழியும்படி நின்திருவருளால் காணப்பெறுவேனோ?
(23)
உள்நின் றுணர்த்தும் உலப்பிலா ஒன்றேநின் | தண்ணென்ற சாந்தஅருள் சார்ந்திடவுங் காண்பேனோ. |
(பொ - ள்) உணர்விற்கு உணர்வாய் உண்ணின்று ஓவாது உணர்த்தியருளுகின்ற அழிதலில்லாத ஒப்பில்லாத தனிப் பெருமுதலே நின்னுடைய மிகக் குளிர்ந்த அமைதி வாய்ந்த நின்திருவருளை அடியேன் சார்ந்திடவுங் காணப்பெறுவேனோ?
(24)
ஓடுங் கருத்தொடுங்க உள்ளுணர்வு தோன்றநினைக் | கூடும் படிக்கிறைநீ கூட்டிடவுங் காண்பேனோ. |
(பொ - ள்) உலகியல் வழியாகச் செல்லுங் கருத்து ஒடுங்கவும், உள்ளுணர்வு விளங்கவும், நின்திருவடியினைக் கூடும்படிக்கும் முதல்வனே நீ அடியேனுக்குக் கூட்டிடவும் காணப்பெறுவேனோ?
(25)
வாக்கால் மனத்தால் மதிப்பரியாய் நின்னருளை | நோக்காமல் நோக்கிநிற்கும் நுண்ணறிவு காண்பேனோ. |
(பொ - ள்) சொல்லினாலும், நினைப்பினாலும் அளவிட்டுக் கூறமுடியாத இறைவனே நின்திருவருளினை அடியேன் முனைப்பறிவு முன்னிட்டுக் காணாமல் திருவருளுணர்வு கண்ணாகக் காண்கின்ற நுண்ணிய அறிவும் எளியேனுக்குண்டாகக் காண்பேனோ? நோக்காமல் நோக்கல் - கண்ணால் பாராது கருத்தால் பார்த்தல்.
(26)