இவ்வுடம்பு நீங்குமுனே எந்தாய்கேள் இன்னருளாம் | அவ்வுடம்புக் குள்ளே அவதரிக்கக் காண்பேனோ. |
(பொ - ள்) காணப்படும் இவ்வுடம்பு நிலத்தே விழுமுன்னே எம் ஆருயிர்த் தந்தையே நின்திருவருளாம் பேருடற்கண் அருள் தோற்றமுறவுங் காணப்பெறுவேனோ?
(27)
நித்தமாய் ஒன்றாய் நிரஞ்சனமாய் நிர்க்குணமாஞ் | சுத்தவெளி நீவெளியாய்த் தோன்றிடவுங் காண்பேனோ. |
(பொ - ள்) அழிவில்லாதவனாகியும், ஒப்பில்லாதவனாகியும் களங்கமில்லாதவனாகியும், மாயாகாரியமாகிய முக்குணமில்லாதவனாகியும், திருச்சிற்றம்பலம் எனப்படும் அறிவுப் பெருவெளியாகியும் நின்றருளுகின்ற நீ அடியேனுக்கு நேராக வெளிப்பட்டுத் தோன்றியருளவுங் காண்பேனோ?
(28)
கண்ணிறைந்த மோனக் கருத்தேஎன் கண்ணேஎன் | உள்நிறைந்த மாயை ஒழிந்திடவுங் காண்பேனோ. |
(பொ - ள்) அடியேனுக்கு நேருக்கு நேரான மவுனக்கருத்தே, எளியேன் கண் போன்றவனே, ஏழையேன் மனத்தின் நிறைந்துள்ள மாயை ஒழிந்திடவுங் காணப்பெறுவேனோ?
(29)
அத்தா விமலா அருளாளா ஆனந்த | சித்தா எனக்குன்அருள் செய்திடவுங் காண்பேனோ. |
(பொ - ள்) அத்தனே, இயல்பாகவே பாசங்களினீங்கிய தூயோனே, திருவருட் செல்வனே, பேரின்பப் பெருவடிவினனே, பேரறிவாளனே, அடியேனுக்கு நின்திருவருள் செய்திடவுங் காணப்பெறுவேனோ?
(30)
வீணே பிறந்திறந்து வேசற்றேன் ஆசையறக் | காணேன் இறைநின் கருணைபெறக் காண்பேனோ. |
(பொ - ள்) பயனில் பிறப்பாய்ப் பிறந்து இறந்து இளைப்புற்று வருந்துவேனாயினேன். ஆனால் ஆசையறக் கண்டிலேன்; நின்னுடைய திருவருளைச் சிறிதளவேனும் அடியேன் பெறக் காணப்பெறுவேனோ? வேசறுதல் - வருந்துதல்.
(31)
சட்டையொத்த இவ்வுடலைத் தள்ளுமுன்னே நான்சகச | நிட்டையைப்பெற் றையா நிருவிகற்பங் காண்பேனோ. |
(பொ - ள்) குப்பாயம் எனப்படும் சட்டையை ஒத்த இவ்வுடலை நிலத்தே வீழ்த்துமுன் அடியேன் இயல்பாகப் பொருந்தக் கூடிய நிட்டையினைப் பெற்று வேறுபாடற்ற ஒடுக்கத்தினையும் காணப்பெறுவேனோ?
(32)