பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


68

எந்தநிலை பேசினும் இணங்கவிலை யல்லால்
    இறப்பொடு பிறப்பையுள்ளே
  எண்ணினால் நெஞ்சது பகீரெனுந் துயிலுறா
    திருவிழியும் இரவுபகலாய்ச்
செந்தழலின் மெழுகான தங்கம்இவை என்கொலோ
    சித்தாந்த முத்திமுதலே
  சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே
    சின்மயா னந்தகுருவே.
     (பொ - ள்) "ஐந்துவகை . . . . . . என்றிருந்தேன்" - நிலம், நீர், நெருப்பு, உயிர் (காற்று), நீள்விசும்பு. ஐந்துவகையாகி இருக்கின்ற பூதங்களும், அவற்றின் வேறுபாடுகளும் கூடித் தோன்றும் இவ்வுடம்பு நீர்மேல் காணப்படும் குமிழி போன்று நிற்கின்றது என்னும் மெய்ம்மையினை அடியேன் உணராது இருந்த காலமெல்லாம் உள்ளம் கழிமகிழ்வு கொள்ள (அறுசுவை மிக்க நறுமணங் கமழும் உண்பொருள்களைச் சுவை பெருக) உண்டும், (பஞ்சினும், பட்டினும், மயிரினும் நெய்தமைத்த உடைவகைகளை உவப்புற) உடுத்தும், (இன்பத்துட் சிறந்த உடனுறைவாகிய) காதலின்பங் கனிவுறத் துய்த்தும், இவையே பிறவிப்பயனாகிய இன்பமெனப் பெரிதுவந்தெண்ணி, அந்நெறியே ஆர்வமொடுகொண்டு இறுமாந்திருந்தேன் ;

    "பூராய . . . முதலே" - (இவ்வாறு சிலகாலமெல்லாம் நலமின்றிக் கழிந்தன) அந்நிலையில் (மாணவனுக்குப் பள்ளிப் பருவம் வருதலும், ஆசான் தொடர்பு அருளால் அமைவதுபோன்று) எளியேன்பால் திருவருள் மிக்கோங்கி எழுந்தருளிவந்து, முதலும் முடிவும் தெளிவாக உணர்த்தியருளலும் நிலையென்றிருந்த உலகியலின்பங்கள் எவ்வாறு மறைந்துபோயின என்று சிறிதும் புலனாகவில்லை. (அவற்றைப் பற்றிய நிலைகளில்) எவ்வகை நிலையைச் செவ்வையுற யார் எடுத்துப் பேசினும் உள்ளங்கொள்ள இணங்குவதில்லை;

     அல்லாமலும் இறக்குங் காலத்தும் பிறக்குங் காலத்தும் உயிர்படுந் துன்பங்களை உள்ளத்துள்ளே எண்ணினால் எளியேன் நெஞ்சம் திடுக்கிட்டு அரண்டு இரு கண்களும் இரவுபகலாய்ச் சிறிதும் உறக்கங் கொள்ளவில்லை. என் உடம்பும், செந்தீயிற்பட்ட மெழுகென இரவு பகலாய் உருகுகின்றது. இவ்வாறாக எளியேன்பால் நிகழ்வதற்குக் காரணம் யாதோ? (ஆகமமாகிய திருமாமுறையின் முடிவெனப்படும்) செம்பொருட்டுணிவின் சிறப்பெனப்படும் விழுமிய முழுமுதலே!

        "சிரகிரி . . . குருவே"

     (வி - ம்) புந்தி - உள்ளம். பூராயம் - முற்றும்; ஆதியந்தமாயுள்ளன. பகீரென்று - திடுக்கென்று; அரண்டு. அங்கம் - உடம்பு.

     சிந்தாந்தம் என்பது ஆகமங்களின் முடிவெனப்படும். ஆகமம் என்பது திருமாமுறையினைக் குறிக்கும். இவ்வுண்மை வருமாறுணர்க :