தள்ளெனச் சொல்லிஎன் ஐயன் - என்னைத் | தானாக்கிக் கொண்ட சமர்த்தைப்பார் தோழி - சங்கர |
(பொ - ள்) தோழியே! காரணத்தில் நிலையாக உள்ளதும், காரியத்தில் நிலைநில்லாது தோன்றி மறையுந் தன்மையால் இல்லது என்று சொல்லப்படுவதுமாகிய சுட்டியறியத் தக்க பொருளாகி, உன் மனத்தினாலுங் கருதக்கூடிய உலகியற் பொருள்களிலெல்லாம் பற்றுக்கொள்ளாது அவற்றைத் தள்ளிவிடுவாயாக என்றுணர்த்தி, என்தலைவன் எளியேனைமீளா ஆளாக்கித் தன்னுள் அடக்கித் தானாக்கிக் கொண்டருளினன். அவ்வியத்தகு திறப்பாட்டினைக் காண்பாயாக.
(8)
பாராதி பூதநீ யல்லை - உன்னிப் | பாரிந் திரியங் காணநீ யல்லை | ஆராய் உணர்வுநீ என்றான் - ஐயன் | அன்பாய் உரைத்த சொல் லானந்தந் தோழி - சங்கர |
(பொ - ள்) தோழியே! நிலமுதலாகச் சொல்லப்படுகின்ற ஐம்பூதங்களும் நீயாகாய்; எண்ணிப்பார். மெய்ம்முதலாகச் சொல்லப்படுகின்ற ஐம்பொறிகளும் நீயாகாய். சித்தமுதலாகச் சொல்லப்படும் அந்தக்கரணங்கள் நான்கும் நீ ஆகாய். ஆராய்ந்தறிகின்ற உணர்வுடைப் பொருள் நீ ஆவாய் என்று, இறைவன் அன்புடனே திருவாய் மலர்ந்தருளிய திருமொழி இதுவாகும்.
(வி - ம்) பொறி - இயந்திரிம். பார் - நிலம். உன்னி - நினைத்து; ஆராய்ந்து. ஐயன் - இறைவன்; தலைவன்.
ஐம்பூதம் : நிலம், நீர், நெருப்பு, காற்று, வெளி என்பன.
இந்திரியம் ஐந்து : மெய், வாய், கண், மூக்குச், செவி என்பன.
இவை அறிதற்குரிய கருவிகள். இதுபோல வாய், கால், கை, எருவாய், கருவாய் என்பன இவ்வைந்தும் செய்தற்குக் கண்ட கருவிகளாகும்.
நாற்கரணம் : சித்தம், மனம், ஆங்காரம், புத்தி என்பன. இவற்றோடு ஆராய்ந்து மெய்ப்பொருள் கண்டுய்யும் சிறறறிவுடைப் பொருள் நீ ஆகுவை.
(9)
அன்பருக் கன்பான மெய்யன் - ஐயன் | ஆனந்த மோனன் அருட்குரு நாதன் | தன்பாதஞ் சென்னியில் வைத்தான் - என்னைத் | தானறிந் தேன்மனந் தானிறந் தேனே - சங்கர |
(பொ - ள்) தலைவன் மெய்யன்பர்கட்கு அன்பாகக் காணப்படும் மெய்ப்பொருளாவன்; முழுமுதற்றலைவன்; பேரின்ப மவுன அருட்குருவா யெழுந்தருளிய நாதன்; எளியேனுடைய முடியின்கண் தன் திருவடியினைச் சூட்டியருளினன்; சூட்டியருளவே என்னையும் யானறிந்து கொண்டேன்; கொள்ளவே அலையுமனம் தானாகவே நிலைபெற்று அடங்கியது.
(10)