பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


682


இறப்பும் பிறப்பும் பொருந்த - எனக்
    கெவ்வணம் வந்ததென் றெண்ணியான் பார்க்கில்
மறப்பும் நினைப்புமாய் நின்ற - வஞ்ச
    மாயா மனத்தால் வளர்ந்தது தோழி - சங்கர
     (பொ - ள்) சாதலும் மீண்டும் பிறத்தலும் ஏழையேனுக்கு எவ்வாறு வந்து பொருந்தியதென்று உணரின் மறப்பாகிய கேவல வடிவமும் நினைப்பாகிய சகல வடிவமுமாய் நிற்கும் வஞ்ச மனத்தினால் வளர்ந்தது தோழியே!

(11)
மனதேகல் லாலெனக் கன்றோ - தெய்வ
    மவுன குருவாகி வந்துகை காட்டி
எனதாம் பணியற மாற்றி - அவன்
    இன்னருள் வெள்ளத் திருத்திவைத் தாண்டி - சங்கர
     (பொ - ள்) ஏடீ! அடியேனுடைய மனம் கல்லினும் வன்மை யுடையது. தெய்வ மவுன குருவாக எழுந்தருளி வந்து கைக்குறி காட்டி எளியேனுடைய முதன்மைத் தன்மைச் செயலை மாற்றியருளி அம் முதல்வனது இனிய திருவருட் கடலில் அழுத்தி வைத்தருளினன்.

(12)
அருளால் எவையும்பார் என்றான் - அத்தை
    அறியாதே சுட்டிஎன் அறிவாலே பார்த்தேன்
இருளான பொருள்கண்ட தல்லால் - கண்ட
    என்னையுங் கண்டிலன் என்னேடி தோழி - சங்கர
     (பொ - ள்) தோழியே! திருவருளை முன்னிட்டு எப் பொருளையும் பார்ப்பாயாகவென்று திருவாய் மலர்ந்தருளினன்; அதன் உண்மையினை உணராமலே, எளியேன் சுட்டாகிய என்னறிவினாலே எதிரிட்டு நோக்கினேன்; அங்ஙனம் நோக்கும்பொழுது இருளான உலகியற் காரியப் பொருள்களைக் கண்டேனே அன்றி அவ்விருளினைப் பார்த்த என்னையும் அவ்விடத்துப் பார்த்திலேன். ஏடீ, இஃதென்ன புதுமையோ?

     (வி - ம்) மாயா காரியப் பொருள்கள் பண்டே புல்லிய மலமகலும் பொருட்டு முதல்வனால் ஆக்கி அளித்தருளப்பட்ட கருவிகள், அக் கருவிகள்தாமும் மலச்சார்பினால் முதல்வனைக் காட்டுந் தன்மையுடையன வல்ல. அறிவில்லாத பொருள்கள் அறிவுப் பொருள்களைக் காட்டும் ஆற்றலுடையன அல்ல. அறிவே அறிவினைக் காணும், அறிவில் பொருள்களையும் அவ்வறிவே காணும் சுவைப்பொருள்களைக் கண்ணும் மெய்யும் கண்டுந் தொட்டும் உணரும். ஆனால் சுவையினையுணரா. சுவையினை நாவே உணரும். கண்ணும் மெய்யும் நாவினுக்குக் கருவிகளாகும். மேலும் அந் நாவும் கலந்து கரைந்து இரண்டற்று ஒன்றிய புணர்ப்பினால் மட்டும் அச் சுவையினை உணரும். இதுபோல் அறிவுப் பொருளாகிய ஆன்மா பேரறிவுப் பொருளான ஆண்டான் கலப்பாலேயே தன்னைக் காணும். திருவருள் மேம்பட்டபோழ்து இக்கருவிகளும்