முதல்வன் எல்லாமாய் அல்லதுமாய் நிற்கும் நிலையினைவருமாறுணர்க:
| "வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி |
| ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க் |
| கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு |
| வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே." |
| -8. திருச்சதகம். அறி. 5. |
'வரவினொடு போக்கற்று' என்பது பிறப்பு இறப்பு இன்மையைக் குறிக்கும். இவ்வுண்மை வருமாறுணர்க:
| "பிறவாதும் இறவாதும் பெருகி னானைப் |
| பேய்பாட நடமாடும் பித்தன் தன்னை |
| மறவாத மனத்தகத்து மன்னி னானை |
| மலையானைக் கடலானை மனத்து ளானை |
| உறவானைப் பகையானை உயிரா னானை |
| உள்ளானைப் புறத்தானை ஓசை யானை |
| நறவாரும் பூங்கொன்றை சூடி னானை |
| நாரையூர் நன்னகரிற் கண்டே னானே." |
| -6 - 74 - 6. |
'குறி' யொன்றும் இல்லாமையை வருமாறுணர்க:
| "திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை |
| உருநாம் அறியவோர் அந்தணனாய் ஆண்டுகொண்டான் |
| ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமிலார்க் காயிரந் |
| திருநாமம் பாடிநாந் தெள்ளேணங் கொட்டாமோ." |
| - 8. திருத்தெள்ளேணம், 1. |
'விந்து நாதமற்' றென்பது தூமாயையுங் கடந்துநின்று அம் மாயையையும் ஆட்டும் வாய்மை மெய்ப்பொருள் என்பதாம்.
'ஒன்றற்று இரண்டற்று' என்பதன் உண்மையினை வருமாறுணர்க:
| "ஒன்றன் றிரண்டன் றுளதன் றிலதன்று |
| நன்றன்று தீதன்று நானென்று-நின்ற |
| நிலையன்று நீயன்று நின்னறிவு மன்று, |
| தலையன் றடியன்று தான்." |
| - திருக்களிற்றுப்படியார், 58. |