வாடுதலு மற்றுமேல் ஒன்றற் றிரண்டற்று | வாக்கற்று மனமுமற்று | மன்னுபரி பூரணச் சுகவாரி தன்னிலே | வாய்மடுத் துண்டவசமாய்த் | தேடுதலு மற்றவிட நிலையென்ற மௌனியே | சித்தாந்த முத்திமுதலே | சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே | சின்மயானந்த குருவே. |
(பொ - ள்) "கூடுத . . . . . . ஞானமற்று" - (வேறிடத்துள்ள பொருள்போல் வந்து) கலத்தலும், பின் நீங்குதலும் இல்லாததாகி, தொடர்பு ஏதும் இல்லதாகி, (செல்வம் இன்மையாற்) குவிதலும் (அஃதுண்மையான்) மலர்தலும் இல்லாததாகி, (மாயாகாரியமாக வெளிப்படும்) மூன்று குணங்களும் இல்லாததாகி, (உரியதாயுள்ள இடத்தினின்று) வருதலும் (பின் அவ்விடத்திற்குப்) போதலும் இல்லாததாகி, (மாயாகாரிய உருவங்களிற் காணப்பட்டு மாறுதலின்றி, நிலைப்பாயுள்ள) அடையாளங்களும், பெயர்களும் இல்லாததாகி (அன்பறிவாற்றல்களை மறைத்துப் பிறப்புக்கு வித்தாம் இருவினைகட்கு ஏதுவாய்த் தொன்மையிலேயே குற்ற இயல்பாய் ஒட்டியுள்ள) ஆணவ மலமும் இல்லாததாகி, (குறையிடையார் தங்குறை நிறைக்கப் பிறிதொன்றனைக் கிட்டும் வரையும் இடையறாது எண்ணும் எண்ணம் போன்று) யாதோர் எண்ணமும் இல்லாததாகி, (வரையறைப்பட்ட பொருள்போன்றும் உருவுடைப் பொருள்போன்றும்) மேற்புறமென்றும், கீழ்ப்புறமென்றும், நடுவென்றும், பக்கமென்றும் சொல்லப்படுவதொன்றும் இல்லாததாகி, வட்டமாகிய விந்துவும், ஒலியாகிய நாதமும் இல்லாததாகி, ஐந்து வகையாகச் சொல்லப்படும் பூதங்களின் வேறுபாடுகள் ஒன்றும் இல்லாததாகி, (ஞாதுருவாகிய) காண்பானும், (ஞானமாகிய) காட்சியும் இல்லாததாகி;
"வாடுதலு . . . .. முதலே" - கருதியது கைகூடாமையினால் ஏற்படும்) வாட்டமுறுதலும் இல்லாததாகி, ஒன்றென்று சொல்லப்படுந் தன்மையும் இரண்டென்று சொல்லப்படுந் தன்மையும் இல்லாததாகி, (சொல்லுதற்குக் கருவியாகிய) நாவும் (எண்ணுதற்குக் கருவியாகிய) மனமும் இல்லாததாகி, நிலைபெற்ற எங்கும் நீக்கமில் நிறைவான, பேரின்பப் பெருங்கடலனைய முழு முதல்வன் திருவடியில் (திருவருட்டுணையால்) இரண்டறக் கலந்து, உணர்வு வாய்மடுத்து இன்புற்று, (தன்னை மறந்து) அதன்வயமாய்த் தேடுதலும் இல்லாத திருஇடம் நீங்கா உண்மை நிலையென்று (அடியேனுக்கு) செவியறிவுறுத்தருளிய, (உணர்வின் எல்லையாம்) உரையொழி குருவே! திருமாமறைமுடிவாம் திருவடிப்பேற்றுச் சீர்சால் முழுமுதலே!
"சிரகிரி . . . . . . .குருவே"
(வி - ம்) தொந்தம் - தொடர்பு. குணம் - அறிவு ஆட்சி அழுந்தல்களாகிய சாத்துவிக இராசத தாமத மாயா குணங்கள். ஞாதுரு - காண்பான். ஞானம் - காட்சி. சுகவாரி - இன்பக்கடல்.