(பொ - ள்) "ஆதிக்க . . . மயக்குதே" - இம் மாயைக்கு (அல்லலுறுத்தி அடக்கி ஆளும்) முதன்மையினை நல்கியவரார்? (இம்மாயைக்கு) எளியேன் அறிவன்றி வேறு இடம் இல்லையோ? வானத்துப் பூவும், கானலின் நீரும் (உற்றவிடத்துப்) பயன்வேண்டியபொழுது பயன் தந்துதவுமோ? (அடியேனுக்குக் குருவே) நீர் அருளிச்செய்த அருமறை (உபதேசம்) யினையும் (கைவிட்டொழியுமாறு) மயக்குகின்றதே;
"அபயநான் . . . புகல்வாய்" - அடியேன் புகலிடமாகப் புகுந்தடங்கிய, (நின்) திருவருள் சிறிதும் தோன்றாதபடி, நிலைபேறில்லாத (தோன்றியொடுங்குந் தன்மைத்தாய) இவ்வுலகத்தினை, உண்மையெனக் கொள்ளுமாறு நிலைநாட்டி எளியேன் அறிவினிடத்தில், கண் கட்டுவித்தை யெனப்படும் இந்திரசாலம் இயற்றிப் பலவகையான விளையாட்டுக் காட்டி நிலைநாட்டுகின்றதே. இம் மாறுபாட்டைச் செய்யும் இவ் வித்தையினை வென்றடக்கும்படியான ஒரு வழிவகையினைத் தந்தருள்வது எந்த நாளிலோ மொழிந்தருள்வாயாக;
"சண்மத . . . குருவே" - (பலவாகச் சொல்லப்படும் கொள்வார் நிலைமைக்கேற்ப) அறுவகை மதங்களையும் நாட்டுவித்து மறைமுடிபும் முறைமுடிபும் நாடுங்கால் ஒன்றே என்னும் பொதுமை நிலையினைக் கொண்டு நடத்துதலாகிய மெய்யுணர்வுத் தன்மையும், பெரிய திசைகளுடன் உலகப் பரப்பு முழுமையும், அடியேன் அறிந்துகொள்ளும்படி எழுந்தருளி வந்து திருவருள் புரிந்த மெய்யுணர்வுக் குருவே.
"மந்த்ர . . . குருவே"
(வி - ம்) ஆதிக்கம் - ஆட்சித் தலைமை. அந்தரம் - வானம். அவசரத்து - வேண்டும்பொழுது; உற்ற நேரத்து. உபயோகம் - பயன். அபயம் - சரண்; புகல். உபாயம் - வழிவகை. சண்மதம் - அறுசமயம். ஸ்தாபனம் - நிலைநாட்டல். சமரசம் - பொதுமை; ஒற்றுமை. மாதிக்கு - பெரிய திசை.
சமயங்களாறும் அவரவர் தகுதிக்கேற்றவாறு அமைந்துள்ளன. அவை யனைத்தும் செந்நெறியாகிய சிவனெறிக்கேற்றும் படிமுறையாகும். இவ்வுண்மை வருமாறுணர்க :