பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


95


        "மந்த்ர . . . குருவே"

     (வி - ம்) போனகம் - தாளான்வந்த சிறந்த உணவு. புருஷர் - மக்கள். தர்மம் - அறம். முக்யம் - முதன்மை. சோபானம - ஏணிப்படி முறை. அணுபக்ஷம் - ஆவிப்பக்கம். சம்புபக்ஷம் - சிவப்பக்கம்.

    அளவைகள் காண்டல் கருதல் உரையென்னும் மூன்றிலடங்கும். இவற்றின் விளக்கங்களைச் சிவஞானசித்தியார் அளவையிலக்கணத்திலும், மணிமேகலை 27. சமயக்கணக்கர் தந்திறங்கேட்ட காதையிலும் தருக்கசங்கிரகம் அன்னம்பட்டியம் முதலிய பிறநூல்களிலும் கண்டு கொள்க.

    இவ்வுண்மை வருமாறுணர்க :

"மாசறு காட்சி ஐயந் திரிவின்றி விபற்ப முன்னா
 ஆசற அறிவ தாகும் அனுமானம் அவினா பாவம்
 பேசுறும் ஏதுக்கொண்டு மறைபொருள் பெறுவ தாகும்
 காசறும் உரையிம் மானத் தடங்கிடாப் பொருளைக் காட்டும்."
- சிவஞானசித்தியார், அளவையிலக்கணம் - 2.
சாதன நான்கு :

    1.நித்தியாநித்யவஸ்துவிவேகம் 2. இகமுத்ரார்த்த பலபோக விராகம் 3. சமாதிசட்கசம்பத்தி 4. முமூட்சுத்துவம் என்ப. 1. பேருயிராகிய சிவபெருமான் ஒருவனே என்றும் பொன்றா இயற்கை இயல்பினுள்ளவன்; உடல் உலகுக ளனைத்தும் காரியப்பாட்டால் தோற்ற ஒடுக்கங்களைக் கொண்டு இயங்குவன என்னும் உண்மையினைப் பகுத்தறிதல்.

    2.இம்மை மறுமை இன்பங்கள் நிலையுள்ளனவல்ல, துன்பத்துக்கிடமான குற்றமுடையன. அதனால் சிறுநீர், மலம் முதலியவற்றைக் காண நேரின் ஏற்படும் அருவருப்புப் போன்று அருவருப்புக் கொண்டு பற்றுக் கொள்ளாது விடுதல்.

    3.அகக்கருவியின் ஒடுக்கம், செய்தற்கருவியின் ஒடுக்கம்' இடையறாதுள்ளல், பொறுமை, முற்றத்துறத்தல், சிவகுருவினிடத்தும் சிவநூல்களினிடத்தும் உறுதியான மனங்கொள்ளுதலாகிய நற்பேறு.

    4.சிவப்பேற்றில் பற்றுறுதலும், நிலையாப்பொருள்களினிடத்தில் பற்றுறுதலும் திருவடிப் பேற்றிற்கு வாயில்களாதலால் இவற்றை மேற்கொள்ளும் தலையாய வேட்கை.

    சீலமுதலிய நானெறியில் நின்றவர் முறையே சிவவுலகத் திருத்தல், சிவனண்மையிலிருத்தல், சிவனுருப் பெறுதல், சிவனடி எய்தல் பெறுவர். சீலம் (சரியை), நோன்பு (கிரியை), செறிவு (யோகம்), அறிவு (ஞானம்).