பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


94


போனகம் இருக்கின்ற சாலையிடை வேண்டுவ
    புசித்தற் கிருக்குமதுபோல்
  புகுடர்பெறு தர்மாதி வேதமுடன் ஆகமம்
    புகலுமதி னாலாம்பயன்
ஞானநெறி முக்யநெறி காட்சியனு மானமுதல்
    நானாவி தங்கள் தேர்ந்து
  நான்நான் எனக்குளறு படைபுடை பெயர்த்திடவும்
    நான்குசா தனமும்ஓர்ந்திட்
டானநெறி யாஞ்சரியை யாதிசோ பானமுற்
    றணுபக்ஷ சம்புபக்ஷம்
  ஆமிரு விகற்பமும் மாயாதி சேவையும்
    அறிந்திரண் டொன்றென்னுமோர்
மானத விகற்பமற வென்றுநிற் பதுநமது
    மரபென்ற பரமகுருவே
  மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூலன்
    மரபில்வரு மௌனகுருவே.
     (பொ - ள்) "போனக . . . தேர்ந்து" - (இனிமையுடனுண்டற்குரிய அறுசுவையுண்டி) நன்கினிது சமைத்து வைக்கப்பட்டுள்ள மடைப்பள்ளியில் உண்டற்கு வேண்டிய பொருள்கள் அனைத்தும் குறைபாடு சிறிதுமின்றி அமைந்திருப்பதுபோல், மக்கள் அடைதற்குரிய அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப்பொருள் நான்கினையும் உணர்த்தும் திருமாமறை முறைகளாகிய செந்தமிழ் வேதாகமங்கள் உள்ளன. அவற்றால் உண்டாகும் பயனில் மெய்யுணர்வுநெறி மிகவும் முதன்மையானதாகும்; அதனைக் காண்டல் கருத லுரை யென்னும் அளவைகளோடும் பலவகையான் நன்கு ஆராய்ந்து.

    "நானா . . . விகற்பமும்" - நான் நான் என முனைத்துநிற்கும் குழறுபாட்டை அடியோடொழிக்கவும் நால்வகைப் பயிற்சித்துணைகளையும் ஆய்ந்துணர்ந்து; அதற்கு இன்றியமையாத படிமுறை எனப்படும் சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்னும் நற்றவ நான்மையினையும் உறுதியாகக்கொண்டு அவற்றுள்ளும் ஆவிப்பக்கமும், சிவப்பக்கமும் என்று கூறப்படும் இருவகை வேறுபாடுகளும்.

    "மாயாதி . . . குருவே" - மாயை, உயிர், சிவம் எனப்படும் பொருள்களின் காட்சிமுதலிய மெய்ம்மைகளும் உண்மையா னுணர்ந்து, பொருள்நிலை யுண்மை இரண்டென்றோ, ஒன்றென்றோ சொல்லத்தக்க ஒப்பற்ற உள்ளத்து வேறுபாடுகள் இல்லாதொழிய, வெற்றியுடன் நிற்பதே நம்முடைய அழியா மரபென்றருளிய மேலாம் மெய்யுணர்வுக் குருவே.1

 1. 
'இம்மையே' சிவஞானசித்தியார், 8. 2 - 2.  
 " 
'அரிவையரின்' சிவப்பிரகாசம், 51.