பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


93


     (பொ - ள்) "மின்னனைய . . . காட்டிப்" - (தோன்றி நெடிது நிற்பதுபோலக் காட்டி விரைய மறையுந் தன்மை வாய்ந்த) மின்னலுக் கொப்பான நிலையில்லாத பொய்யுடலை (அழியாது என்றும்) நிலைநிற்ப தென்று மைதீட்டப்பட்ட கண்களைக்கொண்டு (மம்மர் நெஞ்சுசேர் ஆடவர்களை) மயக்கவலையில் விழும்படிசெய்யும் (மெய்ந்நெறி தேறாத) பெண்ணியலார் இன்பமே நிலையான பேரின்பம் என்றும், (அப் பெண்களோடு கூடிப் பகட்டாய் வாழ்தற்கமைந்த) மாடமாளிகை, மேல்வீடு நிலாமுற்றம் முதலிய பல வமைந்த வளமனையே (கிடைத்தற்கரிய) இன்ப ஒளியுலகமென்றும், (இன்பத்திற்கு ஏதுவாகிய) பொன்னையும் (அப் பொன்னால் தேடப்படும்) பண்டங்களாகிய பொருள்களையும் அழியாது வளர்ந்து பெருகும் நிலைப்பொருளென்றும் மிகவிரும்பி (தம் புன்மைப்)த் தம் பொய்க்கோலத்தின் மிகுதிப்பாட்டை மேற்கொள்ள வெளிப்படுத்தி;

    "பொறையறிவு . . . குருவே" - (இம் மயக்கில் விட்டிலென வீழ்ந்த ஆடவர் தங்கட்கு இன்றியமையாத) பொறுமையும், சிறந்த அறிவும் (செருக்கற்று இருவகைப் பற்றும் நீங்குதலாகிய) துறவும் (பெறத்தக்க ஊதியமாகிய) ஈகை முதலிய நற்பண்புகளும் (சிறிதும் வந்துபொருந்த இடங்கொடாது) சேராமல் மனம்போன போக்கிலே போகவிட்டு, தனக்குத்தானே இணையா இவறன்மை யெனப்படும் பொருட்பற்றாகிய பாழான பேய்பிடித்தாட்ட ஆடி இவ்வுலகில் உலகாயதனுடைய சமயக்கட்டில் சாராமல் மறை முடிபும் முறை முடிபும் ஒருங்கியைந்த சிவனடிப் பேரின்பத் துய்ப்பு நிலைபெறச் 'சிவ' என்னும் ஒப்பில் ஒரு மொழிகொண்டு அடியேனைத் தடுத்தாட்கொண்டு (இறவா இன்ப) அன்பினால் ஆட்கொண்டு நிலையான வாழ்வில் வாழ்வித்தருளிய மூதறிவுக் குரவனே!

        "மந்த்ர . . . குருவே"

     (வி - ம்) மின் - மின்னல். பொய் - நிலையாதது. (மெய் - நிலைப்புள்ளது) மையல் - மயக்கம். மின்னார் - பெண்கள். சொர்க்கம் - இன்ப ஒளியுலகம். உலோபம் - இவறன்மை; வேண்டுவழிப் பொருள் கொடாமை. வேதாந்தம் - மறை முடிபு. சித்தாந்தம் - முறை முடிபு. சமரசம் - இயைபு. ஒருமொழி 'சிவ' என்னும் செந்தமிழ்த் தனிமறை. உலகாயதர் உணர்வழிக்கொள்கைகள் வருமாறு :

"ஊடுவ துணர்வ துற்ற கலவிமங் கையரை யுள்கி
 வாடுவ தடியில் வீழ்ந்து வருந்துவ தருந்த வம்பின்
 கூடுவ துணர்வு கெட்டுக் குணமெலாம் வேட்கை யேயாய்
 நீடுவ தின்ப முத்தி யித்தில்நின் றார்கள் முத்தர்."
- சிவஞானசித்தியார், பரபக்கம் - 31.
"மதிநிலா நுதலா ரோடு மணிநிலா முன்றி லேறி
 முதிர்நிலா வெறிப்பச் செவ்வாய் இளநிலா முகிழ்ப்ப மொய்த்த
 கதிர்நிலா வடங்கொள் கொங்கைக் கண்கள்மார் பகல மூழ்கும்
 புதுநிலா வியநன் போகம் விடுவர்புன் சமயத் தோரே."
- சிவஞானசித்தியார், பரபக்கம் - 30.
(4)