எல்லா மறிந்தநீ யறியாத தன்றெனக் | கெவ்வண்ணம் உய்வண்ணமோ | இருளையிரு ளென்றவர்க் கொளிதா ரகம்பெறும் | எனக்குநின் னருள்தாரகம் | வல்லா னெனும்பெய ருனக்குள்ள தேயிந்த | வஞ்சகனை யாளநினையாய் | மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூலன் | மரபில்வரு மௌனகுருவே. |
(பொ - ள்) "கல்லாத . . . அறியேன்"- (இறைவன் நூல் எனப்படும் செந்தமிழ்த் திருமாமறை திருமாமுறை முதலிய) பதிநூல்களைக் கல்லாமல் (உலக நூல்களைக் கற்றதனால்) ஏற்படும் அறிவும். (சிறந்த சீரியோர் கூரிதாய்க் கூறும் செந்தமிழ் அருமறைகளே செவிச்செல்வமாகும்) அச் செல்வத்தைக் கேட்கும் பேறில்லாத வெறுங்கேள்வியும் கண்ணோட்டமென்னும் தலையளி ஒருசிறிதுமில்லாத அறிவும், கொலை களவு, கட்குடி, பொருந்தாக்காமம் இவற்றைப் பெருமையும் பெருமிதமுமென்று பெருங்காதல் கொண்டலையும் நெஞ்சமும், (எல்லாத்தீங்குகளுக்கும் வித்தாகக் காணப்படும்) பொல்லாங்கு நிறைந்த பொய்ம் மொழிகளும் அல்லாது, நன்மைகள் பொருந்தும் செவ்விய குணங்கள் ஏதும் அறிந்திலேன்.
"புருஷர்வடி . . . உய்வண்ணமோ"- (அறிவன் நூல் முதலியவற்றை ஆய்ந்து உறுதிப் பொருள் தேர்ந்து நன்மை கடைப்பிடித்து ஒழுகுவதன் காரணமாக) ஆகக்கூடிய ஆள்வடிவமாக அடியேன் ஆனதேயல்லாமல் கனவிலும் ஆள்நிலை எய்தினார் அடையவேண்டிய அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப்பொருள்கள் சிறிதும் உடையேனல்லேன்; முற்றுணர்வுடைய நீ எல்லாம் அறிகின்றமுறைமையில் இதனை அறியாமலிருப்பதற் கில்லை; அடியேனுக்கு எந்தவகையில் உய்யும் வண்ணம் வாய்க்குமோ (அறிகிலேன்).
"இருளை . . . நினையாய்" - புறவிருளைப் (போக்க வேண்டி) இருளென்று எண்ணி மெய்யுணர்ந்தார்க்கு, நீங்கா நிலைக்களமாவது (அவ்விருளைப் போக்கும் ஆற்றலுடைய) புறவொளியேயாம்; (உன்னையே புகலென்று திருவருளால்) உணர்ந்துகொண்ட அடியேனுக்கு நின் திருவருளே நிலைத்த புகலிடமாகும்; முடிவிலாற்ற லுடையவனென்னும் திருப்பெயர் உனக்கே யுடையதாதலின் (ஒன்றுக்கும் பற்றாத பொல்லாங்கு நிறைந்த) வஞ்சகனாகிய எளியேனை ஆண்டு கொண்டருளத் திருவுள்ளங் கொண்டருள்வாயாக.
"மந்த்ர . . . குருவே"
(வி - ம்) புருஷன் - ஆள். முப்பொருள் உண்மையைச் செப்பமுற உணர்த்தும் உணர்வு மெய்யுணர்வு. அவ்வுணர்வை ஐயந்திரிபின்றி உணர்த்தவல்ல மெய்ந்நூல்களே கற்க வேண்டிய விழுமிய முடிநூலாகும்.