பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


98


அதுவே உவமையிலாக் கலைஞானம். ஏனைநூல்கள் இதனைக் கவருதற்குத் துணைநிற்கும் படிமுறை நூல்களாகும். படிமுறைநூல்களைக் கற்று முடிநூலைக் கல்லாதொழியின் நோயாளியொருவன் நோய் நீக்கத்தக்க மருத்துவனையும் மருத்துவ மனையையும் கேள்விப்பட்டு மருத்துவ மனையைச் சென்றெய்தி மருத்துவனைக் காணாதொழிந்த வாய்மையோ டொக்கும். கற்றற்குரிய விழுமிய நூல்கள் திருமுறை நூல்களும் மெய்கண்ட நூல்களுமே யாகும். அவ்வுண்மை வருமாறுணர்க :

"சிவனடியே சிந்திக்குந் திருப்பெருகு சிவஞானம்
 பவமதனை யறமாற்றும் பாங்கினிலோங் கியஞானம்
 உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம்
 தவமுதல்வர் சம்பந்தர் தாமுணர்ந்தார் அந்நிலையில்."
- 12 சம்பந்தர் - 70.
    சிவஞானம் பயப்பன - திருமுறை நூல்கள். ஓங்கியஞானம் பயப்பன - மெய்ப்பொருள் நூல்கள்.

    ஏனைய நூல்களைக் குறிக்கும் உண்மை வருமாறு :

"வேதசாத் திரமிருதி புராணகலை ஞானம்
    விரும்பசபை வைகரியா தித்திறங்கள் மேலாம்
 நாதமுடி வான வெல்லாம் பாச ஞானம்1
    நணுகிஆன் மாஇவைகீழ் நாட லாலே
 காதலினான் நான்பிரமம் என்னும் ஞானங்
    கருதுபசு ஞானம்இவன் உடலிற் கட்டுண்
 டோதியுணர்ந் தொன்றொன்றா வுணர்ந்திடலாற் பசுவாம்
    ஒன்றாகச் சிவனியல்பின் உணர்ந்திடுவன் காணே."
- சிவஞானசித்தியார், 9. 1 - 1.
    ஆகாத செயல்கள் ஆவியைப்பற்றி விடாமையை வருமாறுணர்க :

"அறவினை யாதெனிற் கொல்லாமை கோறல்
  பிறவினை எல்லாந் தரும்."
- திருக்குறள், 321.
"எள்ளாமை வேண்டுவா னென்பான் எனைத்தொன்றும்
 கள்ளாமை காக்கதன் நெஞ்சு."
- திருக்குறள்,281.
"உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
 கட்காதல் கொண்டொழுகு வார்."
- திருக்குறள், 921.
"பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்
 தறம்பொருள் கண்டார்க ணில்"
- திருக்குறள், 141.
 1. 
பாசமா ஞானத். சிவப்பிரகாசம். 10. 5,